×

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவை தடுக்க அமெரிக்காவில் போர்க்கால நடவடிக்கை: பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது

* 1 லட்சம் வென்டிலேட்டர் தயாரிக்க உத்தரவு

வாஷிங்டன்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அமெரிக்காவில் ஒரு லட்சத்தை தாண்டியது. ஒரே நாளில் 400 பேர் பலியாகி உள்ளனர். வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். உலகில் இதுவரை எங்கும் இல்லாத வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 1000 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரசின், புதிய உற்பத்தி மையமாக அமெரிக்கா மாறியிருக்கிறது. அங்கு நாளுக்கு நாள் வைரஸ் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கையில் சீனா, இத்தாலியை மிஞ்சி அமெரிக்கா முதலிடத்துக்கு சென்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் அங்கு புதிதாக 18,000க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பரவ, மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி இருக்கிறது. மேலும், ஒரே நாளில் 401 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி, அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 5,000 ஆக உள்ளது. மொத்த பலி 1,711 ஆக உள்ளது. நியூயார்க்கில் மட்டும் 50,000 பேர் பாதிக்கப்பட்டு, 450 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து 2வது நாளாக அங்கு 15,000க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதிபர் டிரம்ப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளார். போர்காலங்களில் பயன்படுத்தும் சட்டமான பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை பயன்படுத்தி, கொரோனா சிகிச்சைக்கு அவசிய தேவையான வென்டிலேட்டர்களை விரைந்து தயாரிக்க நாட்டின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்சுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பான ஒப்பந்தத்தை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தாமதப்படுத்தி வந்ததால், அமெரிக்க மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய அத்தியாவசியம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுத்திருப்தாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இச்சட்டத்தின் படி, எந்த நிறுவனமாக இருந்தாலும், அரசு கூறும் பொருட்களை உடனடியாக தயாரித்து வழங்க வேண்டும். இதே போல், பிலிப்ஸ், மெட்ரானிக் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் டிரம்ப் நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அடுத்த 100 நாளில் ஒரு லட்சம் வென்டிலேட்டர் தயாரிக்கவும் டிரம்ப் இலக்கு நிர்ணயித்துள்ளார்.  வைரஸ் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், ஊழியர்களுக்காக முகக்கவசங்களை தயாரித்து வழங்குவதாக போயிங் விமான நிறுவனம் உறுதி அளித்துள்ளது. மேலும், மருத்துவ உபகரணங்களை விநியோகிக்க 3 சரக்கு விமானங்களையும் போயிங் நிறுவனம் வழங்கி உள்ளது. அதில் ஒவ்வொரு விமானத்திலும் 29 டன் எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

இதோடு, வைரஸ் நிவாரண சிறப்பு நிதியாக 150 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யும் மசோதாவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், 4 பேர் கொண்ட அமெரிக்க குடும்பத்தினருக்கு 2.55 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பெரு நிறுவனங்களுக்கும் சிறு வணிக நிறுவனங்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடி நிதி உதவியையும் அமெரிக்க அரசு வழங்க உள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க அமெரிக்காவில் கோடிக்கணக்கான மக்கள் வீடுகள் முடங்கியுள்ளனர். பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல, இத்தாலியில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அங்கு நேற்று முன்தினம் மிக அதிபட்சமாக 919 பேர் பலியாகி உள்ளனர்.

ஒரே நாளில் இவ்வளவு பேர் பலியாவது இதுவே முதல் முறையாகும். மொத்த பலி எண்ணிக்கை 9,134 ஆகி உள்ளது. பாதிக்கப்பட்டோர் 86,500 பேர் ஆவர். ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 832 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்த பலி 5,690.  இத்தாலி, ஸ்பெயினில் புதிதாக வைரஸ் தாக்குவோரின் எண்ணிக்கை பெரியளவில் அதிகரிக்கவில்லை. இதுதவிர, ஈரானில் நேற்று 139 பேரும், இங்கிலாந்தில் 181 பேரும், நெதர்லாந்தில் 112 பேரும் பலியாகினர்.

தேவைப்படும் நாடுகளுக்கு வென்டிலேட்டர் தருவோம்
கொரோனா சிகிச்சை அளிக்க, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் செயற்கை சுவாசம் தரும் வென்டிலேட்டர் கருவியின் தேவை அவசியமாகி உள்ளது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வென்டிலேட்டர் கருவியை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன. அடுத்த 100 நாளில் நாங்கள் தயாரிக்க உள்ள 1 லட்சம் வென்டிலேட்டரில் தேவைப்படும் அனைத்து நாடுகளுக்கும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் தான் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உடனுக்குடன் முடிவுகள் தரப்படுகின்றன. அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’’ என்றார்.

அடிவாங்கும் ஐரோப்பா சகஜ நிலையில் சீனா
கொரோனா வைரஸ் சீனாவின் பூர்வீகமாக இருந்தாலும், ஐரோப்பாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஐரோப்பாவில் மட்டும் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி, ஸ்பெயினில் இறப்பு விகிதம் படுபயங்கரமாக உள்ளது. இதனால் ஐரோப்பிய பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டன், பிரான்சின் பாரிஸ், இத்தாலியின் ரோம் போன்ற பாரம்பரிய தலைநகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன. இந்நிலையில், வைரஸ் உருவாகிய சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரம் சகஜ நிலைக்கு திரும்பியிருக்கிறது.

பிற பகுதி மக்கள் அந்நகரத்திற்கு செல்ல நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர். நாளை முதல் ஷாப்பிங் மையங்கள் திறக்கப்பட உள்ளன. அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இன்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க இருக்கிறது. ஏற்கனவே ரயில், பஸ் போக்குவரத்து தொடங்கி விட்டது. சீனாவில் கொரோனா வைரசுக்கு 3,295 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

6 லட்சம் தாண்டியது
உலகம் முழுவதும் கொரானோ பாதித்தோர் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியது. நேற்றைய நிலவரப்படி 6 லட்சத்து 15,519 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 28,717 ஆக உள்ளது. குணமடைந்தோர் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் ஆவர். தினசரி இறப்பு எண்ணிக்கை 3,000ஐ தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : United States ,Warning action , Corona, USA, Coronavirus
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்