×

சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மும்பைக்கு தனி சரக்கு ரயிலில் 150 டிராக்டர் அனுப்பி வைப்பு

சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மும்பைக்கு  தனி சரக்கு ரயிலில் 150 டிராக்டர் அனுப்பி வைக்கப்பட்டது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகம், பயணிகள் ரயில் சேவையை வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ரத்து செய்துள்ளது. அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள், காய்கறி மற்றும் இதர சரக்கு ரயில் சேவையை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.  சரக்கு ரயில் சேவையை அதிகரிக்க ஒவ்வொரு கோட்டத்திலும் வணிக பிரிவு அதிகாரிகள், தீவிர நடவடிக்கை  எடுத்துள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், தடையின்றி கிடைத்திட ரயில்வே மூலம் சரக்குகளை அனுப்பி வைக்கலாம் என உற்பத்தியாளர்களையும், மொத்த வியாபாரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சேலம் ரயில்வே கோட்டத்தில், முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், இங்கிருந்து வட மாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்புவதில் முனைப்பு காட்டியுள்ளனர். இந்த வகையில், சேலம் ஜங்ஷன் கூட்ஸ் செட்டில் இருந்து மும்பைக்கு தனியார் நிறுவனத்தின் 150 டிராக்டர்கள் அனுப்பி வைக்க புக்கிங் செய்யப்பட்டது.  அதன்படி, தனி சரக்கு ரயிலில் 150 புதிய டிராக்டர்களையும் ஏற்றி, மும்பைக்கு அனுப்பினர். இதன் மூலம் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு 11.48  லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.  இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரயில்வே நிர்வாகம், சரக்கு ரயில் சேவையை தொடர்ந்து திறம்பட வழங்கி வருகிறது. அத்தியாவசிய பொருட்களை ரயில்வே மூலம் அனுப்புகிறோம். இதன்மூலம் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது. ரயில்வேக்கும் வருவாய் ஈட்டப்படுகிறது,’’ என்றனர்.


Tags : Salem Railway , Tractor , Salem Railway,Salem Railway Station
× RELATED சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவையில்...