×

பிரதமர் மோடி வேண்டுகோள் கொரோனாவை எதிர்த்து போராட தாராள நன்கொடை வழங்குங்கள்

புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் விருப்பம் தெரிவித்தனர். அந்த உணர்வை மதிக்கும் வகையில்,  குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த PM-CARES நிதியத்திற்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த நிதி தற்போதைய துன்பகரமான சூழலை சமாளிக்கவும், எதிர்காலத்தில் இதே போன்ற ஆபத்துகளை சமாளிக்கவும் உதவும்,’ என கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை தணிக்க, கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது.

இதுபோன்ற அவசர கால மற்றும் துயர சூழ்நிலையை கையாள ஓர் தேசிய நிதியம் இருப்பது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிவாரணம்’ (PM-CARES) என்ற நிதி தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி வழங்க விரும்புவோர் www.pmindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று, தங்களின் பங்களிப்பை கிரெடிட், டெபிட் கார்டு, யுபிஐ, நெட் பேங்கிங் மற்றும் ஆர்டிஜிஎஸ் அல்லது என்இஎப்டி மூலமாக செலுத்தலாம்.
டாடா 1,500 கோடி: பிரதமரின் வேண்டுகோளை தொடர்ந்து, டாடா சன்ஸ் நிறுவனம் 1,000 கோடியும், டாடா அறக்கட்டளை 500 கோடியும் நிதி வழங்கி உள்ளன. கிரிக்கெட் வீரர் ரைனா 52 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் எம்பிக்கள் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து கொரோனா பாதிப் புக்கு 1 கோடி கொடு க்க வேண் டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சிகிச்சை அளித்த நர்சுடன் போனில் பேசிய பிரதமர்:
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாநகராட்சியின் கீழ் செயல்படும் நாயுடு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு பணியில் இருக்கும் சாயா ஜெகதீப் என்ற நர்சுடன் பிரதமர் மோடி நேற்று திடீரென போனில் பேசினார். மராத்தி மொழியில் இந்த உரையாடல் தொடங்கியது.
நர்சிடம் நலம் விசாரித்த மோடி, ‘‘கொரோனா நோயாளிகளுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது, உங்கள் பாதுகாப்பு பற்றி உங்கள் குடும்பத்தினரின் பயத்தை எப்படி போக்கினீர்கள்? நோயாளிகள் பயப்படுகிறார்களா? பல மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நீங்கள் சொல்லும் தகவல் என்ன? என பல கேள்விகள் கேட்டார்.

இதற்கு பதில் அளித்த நர்ஸ் சாயா ஜெகதீப், ‘‘எனது குடும்பத்தை பற்றி நான் கவலைப்படுகிறேன். ஆனால், நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதை நான் சமாளிக்கிறேன். கொரோனா அறிகுறி ஏற்பட்ட நோயாளிகளிடம், ‘பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒன்றும் ஆகாது. பரிசோதனை முடிவில் உங்களுக்கு கொரோனா இல்லை என தெரியவரும்,’ என நம்பிக்கை ஏற்படும் வகையில் பேசுகிறேன். கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளிடம், ‘விரைவில் குணமடைந்து விடலாம்,’ என கூறுகிறேன். மற்ற மருத்துவ பணியாளர்களுக்கு நான் சொல்லும் தகவல், ‘அச்சம் அடைய தேவையில்லை. நாம் கொரோனாவை விரட்ட வேண்டும். நமது நாட்டை வெற்றியடைச் செய்ய வேண்டும். இதுதான் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் லட்சியம்,’ என்றார்.

அதன்பின் பதில் அளித்த மோடி, ‘‘உங்களைப்போல் லட்சக்கணக்கான மருத்துவ பணியாளர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். உங்களுக்கு எனது பாராட்டுக்கள். உங்கள் அனுபவத்தை கேட்டது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்றார். இந்த ஆடியோ உரையாடல் சமூக இணையதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

காலை 4 முதல் 9 வரை நாளிதழ்கள் வினியோகம்: டெல்லி காவல் துறை உத்தரவு
டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என். வஸ்தவா நேற்று வெளியிட்ட அறிக்கையில், `நாளிதழ் ஏஜென்டுகளும், வினியோகஸ்தர்களும் பல்வேறு இடங்களில் நாளிதழ்களை வினியோகிக்க இடையூறாக இருந்ததாக புகார் எழுந்தது. எனவே, நாளிதழ் முகவர்கள், வினியோகிப்பவர்களை தடுக்க வேண்டாம் என்று ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் காலை 4 மணி முதல் 9 மணி வரை நாளிதழ் வினியோகிக்கலாம்,’ என்று கூறப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 29 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: விதிமுறைகளை மாற்றியது உள்துறை
மத்திய அரசு அறிவித்த 21 நாள் முடக்கம் காரணமாக, நாடு முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே இடம் பெயர்கின்றனர். இதனால் அவர்களுக்கு தங்க இருப்பிடம், உணவு, உடை, மருத்துவ வசதிகளை அந்தந்த மாநிலங்கள் செய்து கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு தேவையான நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளும் வகையில் விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது. மேலும், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு அடுத்த நிதியாண்டுக்கு மொத்தம் 29 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியை, வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க பயன்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவை கிடைப்பதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர் மற்றும் டோல்கேட் ஆபரேட்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார்.

தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து பாஜ எம்பி.க்கள் 1 கோடி நிதி
பாஜ தலைவர் ஜே.பி.நட்டா டிவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘கொரோனா நிவாரணத்துக்கு பாஜ.வின் அனைத்து எம்பி, எம்எல்ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக அளிப்பார்கள்.  மேலும், எம்பி தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து பாஜ எம்பி.க்கள் அனைவரும் 1 கோடி அளிப்பார்கள்,’ என தெரிவித்துள்ளார். பாஜ.வுக்கு மக்களவையில் 303 எம்பி.க்களும், மாநிலங்களவையில் 83 எம்பி.க்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியாக திட்டமிடாமல் ஊரடங்கு உத்தரவா?: மத்திய அரசு விளக்கம்
கொரோனா பரவலைத் தடுக்கும் ஊரடங்கு உத்தரவு சரியான திட்டமிடுதல் இல்லாமலேயே அமல்படுத்தப்பட்டதாகவும் இதனால் வெளி மாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பாதியிலேயே தவிப்பதாகவும் குற்றம் சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, `இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு ஜனவரி 30ம் தேதி கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே, 18ம் தேதி முதல் சீனா, ஹாங்காங்கில் இருந்து வந்த பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 25, 39 நாட்களுக்கு பின்னரே பயணிகளை சோதனையிட ஆரம்பித்தன. 12 முக்கிய விமான நிலையங்கள் உள்பட 30 விமான நிலையங்களில் சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 36 லட்சம் பேர் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவை பொருத்தவரை இந்தியா முன்கூட்டியே, விரைந்து செயல்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தது.

Tags : Modi ,Corona , PM Modi, Corona, Donation
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ...