×

அடித்ததற்காக மீனவரிடம் மன்னிப்பு கேட்ட போலீஸ்காரர்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் 144 தடை உத்தரவை மீறி கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்த மீனவரை அடித்த கடலோர காவல்படை போலீஸ்காரர் மீனவர்களின் எதிர்ப்பால் கைகூப்பி மன்னிப்பு கேட்டார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தடையை மீறி படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் திருவாரூர் மீன் வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள், கடலோர காவல் குழும எஸ்ஐ ரகுபதி தலைமையில் போலீசார் ஆசாத்நகர் கோரையாறு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, தடையை மீறி மீன் பிடித்து வந்த மீனவர் ஒருவரை பிடிக்க முயன்றனர். ஆனாலும் அந்த மீனவர் மீன்களை தூக்கிக்கொண்டு ஆசாத்நகர் மீன் மார்க்கெட்டை நோக்கி சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் ஒருவர் அந்த மீனவரை தாக்கியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியில் நின்ற மீனவ சங்க தலைவர் ஜின்னா உள்ளிட்ட மீனவர்கள் “எப்படி கைநீட்டி அடிக்கலாம்” என்று கடலோர காவல் குழும போலீசாரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் கடும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் தடையை மீறி மீன் பிடிக்க சென்றது தவறு.

அதனால் கண்டிப்பாக நடவடிக்கை உண்டு. அவரை நாங்கள் கைது செய்யவேண்டும் என்றனர். இதனால் மீனவ சங்க தலைவர் ஜின்னாவிற்கும், அதிகாரிகளுக்கும் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மீனவர்கள் மத்தியிலும் அதிகாரிகள் மத்தியிலும் விசாரணை நடத்தி கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாக்காத நிலையில் திடீரென கடலோர காவல் குழும போலீஸ்காரர் கை கூப்பியபடி, மீனவ சங்க தலைவர் ஜின்னாவிடம் அடிச்சதுக்கு மன்னிச்சிடுங்க என்று கூறினார்.

அடி வாங்கிய மீனவரும் “அப்போ நான் மீன் பிடிக்க போனதும் தப்புதான் என்றார். இதனையடுத்து அதிகாரிகள் தரப்பில் “இனி யாரும் மீன் பிடிக்க போகக்கூடாது மீறினால் கைது நடவடிக்கை உண்டு” என்று எச்சரித்தனர். இதை மீனவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Tags : Fisherman ,Policeman , Fisherman, pardoner, policeman
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...