×

மிக்ஸி, கிரைண்டர் திடீர் பழுது அம்மி, ஆட்டுக்கல்லை நாடிய பெண்கள்

திருச்சி: தடையுத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பல வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர் திடீரென பழுதாகி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அம்மி, ஆட்டுக்கல்லை தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்று 4வது நாளாக மக்கள் வீடுகளில் முடங்கிக்கிடக்கின்றனர். காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே காலை ேநரத்தில் வீட்டில் இருந்து ஒருவர் வெளியே வருகிறார். தடை உத்தரவை மீறி வெளியில் நடமாடுவோருக்கு தோப்புக்கரணம் உள்ளிட்ட நூதன தண்டனை, அபராதம், வழக்கு பதிவது ஆகிய நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடுகளிலேயே முடங்கியுள்ள ஆண்கள், மனைவிகளுக்கு உதவியாக சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது ஆகிய வேலைகளை செய்து நேரத்தை கழித்து வருகின்றனர். மேலும் குழந்தைகளுடன் கேரம் போர்டு, செஸ், ராஜா ராணி விளையாடி சந்தோசமாக இருக்கின்றனர். ஆனால் பெண்களின் இந்த சந்தோஷத்துக்கு இடையூறாக பல வீடுகளில் அன்றாடும் பயன்படுத்தும் உபகரணங்களான மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், அயன் பாக்ஸ் ஆகியவை திடீரென பழுதாகி உள்ளது. பழுதை நீக்க இந்த உபகரணங்கள் வாங்கிய கடைகளுக்கு போன் செய்தால், போனை யாரும் எடுப்பதே இல்லை. காரணம் அனைத்து கடைகளும் மூடிக்கிடக்கின்றன.

பழுது நீக்குபவரை, செல்போனில் அழைத்தாலும், தடையுத்தரவு காரணமாக அவர் வர மறுக்கிறார். இதனால் பெண்கள் மீண்டும் பழையபடி அம்மி, ஆட்டுக்கல்லை நாடிச்சென்றுள்ளனர். இதுபற்றி திருச்சி கல்லுக்குழியை சேர்ந்த இல்லத்தரசிகள் கூறுகையில், எனது வீட்டில் நேற்றுமுன்தினம் மிக்ஸி திடீரென பழுதாகி விட்டது. இதனால் சமையலுக்கு தேவையான இஞ்சி, பூண்டு அரைப்பது, சட்னி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. எனது கணவர் சமையலுக்கு உதவியாக இருக்கிறார். ஆனால் அம்மிக்கல்லில் அவருக்கு எதுவும் அரைக்க தெரியாது. இதனால் கை வலிக்க நானே அம்மிக்கல்லில் அரைத்து வருகிறேன்.

மிக்ஸி வாங்கிய கடைக்கு போன் செய்தால், அதை எடுக்கவே இல்லை. எனவே மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்ப்பவர்களை உரிய அடையாள அட்டையுடன் வெளியில் நடமாட அனுமதிக்க வேண்டும் என்றார்.

பஞ்சர் டூவீலர்களால் அவதி
பஸ் போக்குவரத்து இல்லாததால் மருத்துவ பணியாளர்கள், மளிகை கடைக்காரர்கள், இறைச்சி கடைக்காரர்கள், பத்திரிகையாளர்கள் டூவீலர்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பழைய டூவீலர்கள் பல ஸ்டார்ட் ஆகாமல் திடீரென மக்கர் செய்கிறது. மேலும் பஞ்சரான டயரையும் ஒட்ட முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நண்பர்களின் டூவீலர்களை ஓசி வாங்கி பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

Tags : Mixi ,Mommy ,Women Who Seek Sheep ,Grinder ,Women ,Ammy , Mixy, Grinder, Sudden Repair, Ammy, Sheep, Women
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா