×

ஏர்போர்ட்களில் சுகாதார கண்காணிப்பில் சிக்காமல் தமிழகம் வந்தவர்கள் 77,151 பேர்: அதிர்ச்சி தகவல் அம்பலம்

நாகர்கோவில்: வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்கள் வாயிலாக சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் சிக்காமல் 77 ஆயிரத்து 151 பேர் தமிழகம் வந்தது தெரியவந்துள்ளது. இவர்களில் குமரி மாவட்டத்தில் மட்டும் 3746 பேர் வருகை தந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை போன்று வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் லட்சக்கணக்கானோர் உள்ளனர். குமரி மாவட்டத்தில் இருந்தும் ஈரான், துபாய், அமெரிக்கா, லண்டன், மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பல ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் கொரோனா பரவலை தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி வண்ணம் இருந்தனர்.

இவர்களை கண்காணிக்க திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அங்கு சுகாதார துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் சிக்கினால் நேராக முத்திரை குத்தப்பட்டு வீடுகளில் கண்காணிப்பில் இருக்க வேண்டும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிடுவர் என்று கருதியவர்கள் அங்கிருந்து நேராக சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் சிக்காமல் குமரி மாவட்டம் வந்து சேர்ந்துள்ளனர். அவர்களை கண்டறிய அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலில் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள் கொரோனா நோயாளிகள் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர் நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் இது தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வருவாய்துறையினர் இந்த நோயாளிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். வெளிநாடுகளில் இந்த பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. அதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளியிடங்களில் சர்வ சாதாரணமாக உலா வந்தது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் மாநில அரசுகள் தங்கள் வசம் வீடுகளில் கண்காணிக்கும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் பட்டியலை மத்திய அரசு கேட்டுள்ளது. இந்த பட்டியல் அவர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது.

காரணம் விமான நிலையங்கள் வாயிலாக வந்தவர்கள் என்று மாவட்ட நிர்வாகங்கள், மாநில நிர்வாகங்கள் வைத்திருந்த பட்டியல் மிக சொற்ப எண்ணிக்கையில் உள்ளது ஆகும். அதாவது விமான நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டு தெரிவித்த விபரங்கள் அடிப்படையில் பெறப்பட்டது ஆகும். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 1099 பேர் வந்ததாக மாவட்ட நிர்வாகம் கூறி வந்தது. இந்தநிலையில் எமிகிரேசன் அலுவலகம் வாயிலாக 4186 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விமானங்களில் வந்துள்ளனர் என்ற தகவலை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மொத்தம் 5285 பேர் என்ற பட்டியல் இருந்த நிலையில் இதில் இரு இடங்களில் பெயர் பதிவுகள் காணப்பட்டவர்கள் பெயர்கள் நீக்கப்பட்ட பின்னர் 4845 பேர் கொண்ட இறுதிபட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் நேற்று முன்தினம் முதல் இறுதி செய்யப்பட்டு பின்னர் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மாவட்டத்தில் 3746 பேர் விமான நிலையங்களில் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் சிக்காமல் சொந்த ஊர்களுக்கு வந்த விபரம் தெரியவந்த நிலையில் அது தொடர்பான விபரங்களை சேகரித்த அதிகாரிகள் இவர்களை வீடு வீடாக சென்று கண்காணிக்க தொடங்கியுள்ளனர். இதே நிலைதான் தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளவர்கள் என்று 18 ஆயிரத்து 912 பேர் விபரங்களை அரசு கூறி வந்த நிலையில் இமிகிரேஷன் அதிகாரிகள் 87,844 பேர் விமான நிலையங்கள் வாயிலாக தமிழகம் முழுவதும் சொந்த ஊர்களுக்கு வந்த விபரங்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது 96 ஆயிரத்து 63 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவார். இதில் விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படாதவர்கள் 77 ஆயிரத்து 151 பேர் ஆவர்.

இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகம் பேர் உள்ளனர். இவர்களில் பலர் தற்போது கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் முடிவுகள் பாசிட்டிவ் என வருவதும் தொடர்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோ தொற்றும் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 38 பேர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எந்த அளவுக்கு வெளியே நடமாடக்கூடாது என்று கண்காணிக்கின்ற அரசு வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களையும் மிக நெருக்கமாக கண்காணித்து அதில் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்கள் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கும், அருகாமை வீடுகளில் உள்ளவர்களுக்கும் பவுரம் முன்னர் அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Tags : Tamils ,Tamil Nadu ,airports ,Airport , Airport, health monitoring, Tamil Nadu came
× RELATED தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது...