PM CARES Fund-க்கு குவியும் நிதியுதவி: அக்‌ஷய் குமார், ரெய்னா, டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில் நிதியளிப்பு; சிறிய உதவியும் பெரிது தான்...பிரதமர் மோடி நெகிழ்ச்சி

டெல்லி: கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால் இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது.

இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து நாட்டில் உள்ள பல்வேறு மக்கள், பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு நிதியை செலுத்தி வருகின்றனர். இதில் சிலர் 500 ரூபாய், 1000 ரூபாய் எனவும் அனுப்பிவிட்டு, அதன் விவரத்தை மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வெளியிட்டு வருகிறார்கள். அதன் விவரம் பின்வருமாறு;

நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 கோடி வழங்குவதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அறிவித்துள்ளார். பிரதமரின் வேண்டுகோளையடுத்து நடிகர் அக்‌ஷய் குமார் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 25 கோடியை PM CARES வங்கி கணக்கிற்கு வழங்கியுள்ளார். இந்த நேரத்தில் மக்களின் உயிர் தான் முக்கியம். அதற்காக நாம் முடிந்த அனைத்தையம் செய்ய வேண்டும். என்னுடைய சேமிப்பில் இருந்து நான் 25 கோடி ருபாய் நான் தருகிறேன். உயிர்களை காப்பாற்றுவோம் எனவும் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் ரெய்னா ரூ.25 லட்சம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ரூ.25 லட்சம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது; கொரோனாவை தோற்கடிக்க நாம் அனைவரும் உதவ வேண்டிய நேரம் இது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக 52 லட்சம் (PM-CARES நிதிக்கு 31 லட்சம் மற்றும் உ.பி. முதல்வரின் பேரழிவு நிவாரண நிதிக்கு 21 லட்சம்) தருவதாக உறுதியளிகிறேன். தயவுசெய்து உங்கள் உதவியையும் செய்யுங்கள். ஜெய் ஹிந்த்! என தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா ரூ.1 கோடி

கொரோனாவை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக  தனது எம்.பி.எல்.ஏ.டி நிதியில் இருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.1 கோடி பங்களிக்கிறார். இன்று முன்னதாக, பாஜக தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா, பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் தங்கள் எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியிலிருந்து ரூ .1 கோடியை மத்திய நிவாரண நிதிக்கு விடுவிப்பதாகவும், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.1000 கோடி

டாடா சன்ஸ் கூடுதலாக கொரோனா  மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு 1000 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. டாடா டிரஸ்டுகள் மற்றும் எங்கள் தலைவர் திரு. ரத்தன் டாடா ஆகியோருடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம், மேலும் அவர்களின் முன் முயற்சிகளுக்கு முழு ஆதரவளிப்போம், மேலும் குழுவின் முழு நிபுணத்துவத்தையும் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்புடன் செயல்படுவோம் என அறிவித்துள்ளது. முன்னதாக கொரோனா தடுப்புப் பணிகளுக்கு டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக ரத்தன் டாடா அறிவித்துள்ளார். கொரோனாவை தடுப்பதற்கான அவசர தேவைகளுக்கு நிதி வழங்குவதாக ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நெகிழ்ச்சி

* சாஹில் குலியா என்ற மாணவர் 1000 ரூபாய் அனுப்பிவிட்டு பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு மாணவனாக இந்த தேசத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி என்று தெரிவித்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி, தேசத்தின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க உறுதி செய்கிறது. அற்புதமான செயல் சாஹில். உன்னை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

* சையத் அட்டூர் ரஹ்மான் என்பவர் 501 ரூபாய் அனுப்பிவிட்டு, பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு சின்ன உதவி என்று தெரிவித்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக கொரோனாவை வீழ்த்த நாம் ஒன்றுபட்டு உறுதியுடன் இருப்பதையே இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: