மாஸ்க் தயாரிக்கும் ஆயுத படை போலீசார்

சிவகங்கை: கொரோனா தடுப்பில் முக்கிய பங்காற்றும் மாஸ்க் தயாரிப்பு பணியில் சிவகங்கை ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் முகத்திற்கான மாஸ்க் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு மாஸ்கை ஒரு சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் தொடர்ந்து ஒவ்வொருவரும் புதிய மாஸ்க் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாஸ்க்கிற்கு அதிகப்படியான வரவேற்பு உள்ளதால் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து எஸ்பி ரோஹித்நாதன் ராஜகோபால் உத்தரவின் பேரில் போலீசாருக்கு தேவையான மாஸ்க் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை ஆயுதப்படை போலீசார் மற்றும் பெண் போலீசார் மாஸ்க் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நேரம் தவிர்த்து ஓய்வு நேரங்களில் சுழற்சி முறையில் மாஸ் தயாரிக்கப்படுகிறது.

மாஸ்க் தயாரிப்பு பணியில் ஈடுபடும் போலீசார் கூறியதாவது: மாஸ்க் இல்லாமல் பணியாற்றுவதால் மற்றவர்களை மாஸ்க் அணியுங்கள் என எங்களால் கூறமுடியவில்லை. இதையடுத்து எஸ்பி இந்த முடிவை எடுத்தார். மாஸ்க் தயாரிப்பு பணியில் போலீசார் மட்டுமல்லாது எங்களது குடும்பத்தினரும் ஈடுபட்டு வருகிறோம். இந்த மாஸ்க் ஒருமுறை பயன்படுத்துவது அல்லாமல், சுடு நீர் மூலம் துவைத்து சலவை செய்து தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த மாஸ்க் போலீசார் மற்றும் எஸ்பி அலுவலக பணியாளர்களுக்கு வழங்க உள்ளோம் என்றனர்.

Related Stories: