வெளிநாட்டில் இருந்து வந்த 7 ஆயிரத்து 164 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

* தொடர்ந்து கடைகள் அடைப்பு

* வாகனங்கள் இயங்கவில்லை
Advertising
Advertising

சிவகங்கை/சாயல்குடி: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வெளி நாட்டிலிருந்து வந்த 7 ஆயிரத்து 164 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். எஸ்பி ரோஹித்நாதன்ராஜகோபால், மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட எஸ்பி முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை கண்காணிக்கும் புதிய செயலியினை வெளியிட்டு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மார்ச் 1க்கு பிறகு வெளிநாட்டிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 39 நபர்கள் வருகை தந்துள்ளதை கண்டறிந்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இளையான்குடி பகுதியில் தாய்லாந்து மற்றும் மலேசிய நாட்டைச் சேர்ந்த 11 பேர் மதப் பணிகளுக்காக வருகை தந்ததை கண்டறிந்து 28 நாட்கள் அவர்களை கண்காணிக்கும் வகையில் அமராவதிபுதூர் சானிடோரியம் வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு சிகிச்சை மையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல்முறையாக சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி மூலம் கண்காணிப்பு செயலி கண்டுபிடிக்கப்பட்டு அதன் செயல்பாடு துவங்கியுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டிலிருந்து வந்த நபர்களின் முகவரி, கைபேசி எண் பதிவு செய்யப்பட்டு, பதிவு செய்த நபர்கள் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் அவரவர் வீட்டில் இருந்து வரும் நிலையில் எஸ்பி அலுவலகம் மூலம் கண்காணிப்பு செய்யப்படும்.

பதிவு செய்யப்பட்ட நபர்கள் யாரேனும் இருப்பிடத்தை விட்டு வேறு எங்கேனும் சென்றால் உடனடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செயலியின் வாயிலாக தகவல் வந்துவிடும். இதனால் வெளிநாட்டிலிருந்து வந்த நபர்கள் அனைவரும் ஒரே கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் நிலை உள்ளதால் அவர்களை எளிதாக கண்காணிக்க முடியும். மார்ச் 1ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து வந்து முதற்கட்டமாக கண்டறியப்பட்ட 480 நபர்களில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவக் கண்காணிப்பு நிறைவு பெற்று எந்தவித நோய் தாக்குதலும் இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வெளிநாட்டில் இருந்து வந்த 4 ஆயிரத்து 125 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

மாவட்டத்தில் தடையின்றி காய்கறிகள், உணவு பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். பூவந்தி சுகாதார வட்டாரத்தில் திருப்புவனம் புதூர்,  கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாடுகள் இருந்து வந்த 11 பேர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடுகளில் சுகாதார துறை சார்பில் ஸ்டிக்கர் ஒட்டி கண்காணித்து வருகின்றனர்.

சிறப்பு தொழுகை ரத்து

சிவகங்கை மாவட்ட ஜமாத்தார்கள் மற்றும் சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நம் நாடு முழுவதும் மற்றும் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், நம் மாநில அரசின் வலியுறுத்தல் மற்றும் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் ஆலோசனையின் பேரில் பள்ளிவாசல்களில் நடைபெறும் ஜும்ஆ தொழுகை நடைபெறாது. ஜமாத்தார்கள் தங்கள் இல்லங்களில் தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விரைவில் அடுத்த அறிவிப்பு மாநில அரசிடம் இருந்தும் மாநில ஜமாஅத்துல் உலமா சபையிடம் இருந்தும் வந்தவுடன் அதனுடைய விபரங்கள் ஜமாத்தார்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே அவரவர் இல்லங்களில் இறைவனை வழிபட்டு நமது தேசத்தை அச்சுறுத்தும் இந்த கொடிய நோயிலிருந்து இறைவன் நம் தேச மக்கள் அனைவரையும் காப்பாற்ற பிரார்த்தனை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

Related Stories: