×

கூடுதல் கடனுதவி பெற அனுமதிங்க: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: இந்தியா உட்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் இது சமூக பரவலாக  மாறியதால் உயிர் பலியும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அபாயகரமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரசுக்கு  உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் நேற்று 24 ,341 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்  சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்  மூலம் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,352 ஆக உயர்ந்துள்ளது.  உலகளவில் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,057 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் காரணமாக 19 உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பரவுதலை தடுக்க, அடுத்த மாதம் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது.  தொழில்துறைகள், நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. அன்றாட கூலி வேலை செய்பவர்கள் நிலை மிகவும் பரிதாபமாகி விட்டது. தொழிலாளர்கள்  வேலை இழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண உதவி திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  நேற்று முன்தினம் அறிவித்தார். தொடர்ந்து, ரிசர்வ் வங்கி நேற்று சில முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது. இதில், இஎம்ஐ தவணை சலுகை உட்பட  பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மகாத்மாகாந்தி  ஊரக வேலைவாய்ப்புத்திட்ட ஊதியத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் கணிசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  எனவே அதற்கான நிதியை 500  கோடியாக உயர்த்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் சுமார் 12 லட்சம் பேரும், அமைப்புசார தொழிலாளர்கள் 15 லட்சம் பேரும் உள்ளனர்.  இவர்கள் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்படுவார்கள். எனவே 15 கிலோ அரிசியுடன் ரூ.1000 சிறப்பு தொகையும், எண்ணெய், பருப்பு தலா 1 கிலோ  இலவசமாக வழங்குவதையும் அறிவித்துள்ளேன். எனவே இதற்கு ரூ.500 கோடி ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிறு, குறு நிறுவனங்களுக்கான வங்கி கடன் வட்டியை இரண்டு காலாண்டுகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். கொரோனா தொற்றுநோயைக்  கையாள்வதில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கும், தமிழக அரசுக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பதற்கும் கையில் இருக்கும் பணிகளின் அவசரத்தை  கருத்தில் கொண்டு, ரூ.4000 கோடி சிறப்பு உதவி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி நிவாரண நடவடிக்கைகளுக்கான எனது கோரிக்கையை  அவசரமாக பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி வழங்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி  பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும், கடிதத்தில் மாநில அரசுகள் கூடுதல் கடனுதவியாக ரூ.1 லட்சம் கோடி பெற அனுமதியளிக்க வேண்டும்.  மாநில அரசுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்ப நிதியுதவி வழங்க வேண்டும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை  சீர்செய்ய இந்த நிதியுதவி உதவும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ரூ.4000 கோடி கோரிய நிலையில், தற்போதைய சூழ்நிலைக்கு ரூ.9000 கோடி தேவை என கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Palanisamy ,Modi , Palanisamy's letter to PM Modi demanding Rs.9000 crore for Coronation Prevention
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...