யாரும் வெளியே வர வேண்டாம் தமிழகத்தில் 2வது கட்டத்தை நோக்கி நகரும் கொரோனா: முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் 500 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்ககூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பணியாளர்களிடம் இதுகுறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வுக்கு பின்னர், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:144 தடை உத்தரவு நேரத்தில் மக்கள் கூட்டமாக கூடக் கூடாது. தேவையில்லாமல் வெளியூர் செல்லக்கூடாது, குழந்தைகளையும், பெரியவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஓமந்தூரார் மருத்துவமனை, கோயம்புத்தூர் சிஎஸ் ஆகிய 2 மருத்துவமனைகளிலும் 350 படுக்கை வசதிகள் கூடிய சிறப்பு வார்டுகள், கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை அளிக்க நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சோதனை கூடம் தனியார் சார்பில் 4, அரசு சார்பில் 10 ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இதுவரை 1,243 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 273 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 35 பேருக்கு சோதனையின் வாயிலாக நோய் இருப்பது அறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 277 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து 15 ஆயிரம் பேர் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. எனவே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் யாரும் வெளியே வரக்கூடாது, அதேபோல் வெளியே இருப்பவர்கள் யாரும் அவர்கள் வீட்டுக்கு செல்ல கூடாது. அவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவ கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்பு கொண்டால் உதவி செய்வார்கள், பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கி இந்த கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 530 மருத்துவர்கள் 1000 செவிலியர் 1500 லேப் டெக்னிசியன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவசர காலத்துக்கு புதிதாக 200 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கொரோனா முதல் ஸ்டேஜில் தான் உள்ளது. இரண்டாவது கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதனை முதல் கட்டத்திலேயே தடுக்க வேண்டும். அதற்காக தான் இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழகம் முழுவதும் 1500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்கக்கூடிய கருவி உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Related Stories: