×

கொரோனாவால் கொத்து கொத்தாய் மடியும் உயிர்கள் :சீனாவை விட 3 மடங்கு உயிரிழப்பால் இடிந்து போன இத்தாலி; ஸ்பெயினிலும் பலிஎண்ணிக்கை 5,000ஐ தாண்டியது

டெல்லி : சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 27,341 பேரை பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீயாய் பரவி வருகிறது.  இந்தியாவில் வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இருந்து 79 பேர் விடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் உலகிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரசின் தொற்றுக்கு இத்தாலியில் ஒரே நாளில் ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பது அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆயிரத்து 500ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 6 ஆயிரம் பேர் தொற்று நோயால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 24 மணி நேரத்தில் அந்நாட்டில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 9 ஆயிரத்து 134 பேர் மரணித்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை கொரோனாவின் பூர்வீகமான சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாகும். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த 45 மருத்துவர்களும் அங்கு உயிரிழந்துள்ளனர். ஜெனோவா நகரைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு, சான் மார்டினோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார்.

ஸ்பெயினில் 8 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் அங்கு 773 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரையில் அங்கு ஏற்கனவே 33 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் நோய்த் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக நேற்று மட்டும் 300 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆனால், பெரும் பாதிப்பை சந்தித்த சீனாவில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களோ, மரணித்தவர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Cyclone ,Corona ,Italy ,China ,Spain , Cyclone killed by Corona: Italy, 3 times more deadly than China; In Spain, the polythene count exceeded 5,000
× RELATED மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை தராத...