கோவிந்தா... கோவிந்தா முழக்கமின்றி 20 ஆண்டுக்கு பின் புல் ரெஸ்ட் எடுக்கிறார் ஏழுமலையான்: திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் திருப்தி

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகரும், ஆகம ஆலோசகருமான ரமண தீட்சிதலு நேற்று அளித்த பேட்டி வருமாறு: ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தர்கள் முழக்கத்துடன் இருந்து வந்த ஏழுமலையான் கோயில் தற்போது கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக பக்தர்கள் இன்றி வெறிச்சோடியுள்ளது.  ஏழுமலையானுக்கு கடந்த 20 ஆண்டுகளாக ஆகம முறைப்படி பூஜைகள் நடக்காமல் இருந்தது. பக்தர்கள் அதிகரிப்பால் முறைப்படி நடக்க வேண்டிய 6 கால பூஜைகள், நைவேத்தியங்கள்  உரிய நேரத்தில் முறைப்படி நடத்தாமல் தங்கள் இஷ்டத்திற்கு செய்தனர்.குறிப்பாக, இரவில் தாமதமாக கருவறையை மூடிவிட்டு சில நிமிடங்களில் அதிகாலை என கணக்கு காட்டி சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘சுவாமிக்கு சில மணிநேரங்கள் கூட ஓய்வு தரமாட்டீர்களா?’ எனக் கேட்டேன். இதனால், பல அதிகாரிகள் என்னிடம் வாக்குவாதம் செய்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக மிகப்பெரிய குழப்பங்கள் கோயிலில் நடந்தன. ஆனால், தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்படாததால்  பழங்காலத்தை போன்று இப்போதுதான் உரிய நேரத்தில் 6 கால பூஜைகளும், நைவேத்தியங்களும், ஏழுமலையானுக்கு ஓய்வும் தரப்படுகிறது. தற்போது அனைத்தும் ஆகமமுறைப்படி சரியாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

‘கருவறை விளக்குகள் அணையவில்லை’

திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஏழுமலையான் கோயில் கருவறையில் பிரம்ம தீபம், அகண்ட தீபம் என 2 விளக்குகள் உள்ளது. இந்த 2 விளக்குகளும் சுப்ரபாத சேவையின்போது ஏற்றப்படும். மூலவரின் பக்கவாட்டில் அந்த தீபங்கள் ஏற்றப்பட்டிருக்கும். இதனை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பார்க்க வாய்ப்பே இல்லை. இந்த விளக்குகளை ஏற்றவும், பராமரிக்கவும் தனி ஆட்கள் உள்ளனர். தினசரி இரவில் ஏகாந்த சேவை முடிந்ததும் இந்த தீபங்கள் குளிர்விக்கப்பட்டு அதிகாலையில் சுப்ரபாத சேவையின்போது மீண்டும் ஏற்றப்படும். இந்த தீபம் அணைந்ததாக கூறுவது வெறும் வதந்திதான். கோயில் எதிரே எந்த நேரமும் அணையாமல் எரிந்து வந்த அகிலாண்டம் விளக்கேற்றும் பகுதி தற்போது தீபம் ஏற்றப்படாமல் உள்ளது,’’ என்று மேலும் கூறினார்.

Related Stories: