மே 3ல் நடக்க இருந்த நீட் தேர்வு ஒத்திவைப்பு: மறு தேதி விரைவில் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டு உள்ளதால், மே 3ம் தேதி நடத்தப்பட இருந்த நீட் தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே மாதம் 3ம் தேதி நடத்தப்பட இருந்தது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை அறிவித்துள்ளது. மேலும், பிளஸ் 2-ல் இன்னும் சில பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால், நீட் தேர்வையும் ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் ேநற்று அளித்த பேட்டியில், ‘‘நீட் தேர்வை எழுதுவற்காக மாணவர்களும், பெற்றோர்களும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மையங்களுக்கு செல்ல வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, நீட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

Advertising
Advertising

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இயக்குனர் ஜெனரல் வினீத் ஜோஷி கூறுகையில், ‘‘கொரோனா பரவி வரும் இந்த நேரத்தில், பெற்றோர்களும், மாணவர்களும் சந்திக்கும் சிரமங்களை தவிர்ப்பதற்காக மே 3ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுள்ள நிலைமையை ஆய்வு செய்து, தேர்வுக்கான மறுதேதியை சம்பந்தப்பட்ட அமைச்சகமும், தேர்வு வாரியமும் முடிவு எடுக்கும். இப்போதைக்கு மே மாதம் இறுதியில் நீட் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார்.

Related Stories: