கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார் அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் ஒரே நாளில் 18,000 பேருக்கு கொரோனா:சீனா, இத்தாலியை முந்தியது

வாஷிங்டன்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில், ஒரே நாளில் சீனா, இத்தாலியை முந்திக் கொண்டு அமெரிக்கா முதலிடத்துக்கு சென்றது. இந்நோயை கட்டுப்படுத்த முடியாமல், அதிபர் டிரம்ப் கடுமையாக திணறி வருகிறார். 24 மணி நேரத்தில் இந்நாட்டில் புதிதாக 18,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 268 பேர் இறந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 4 நாட்களாக புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தினமும் 10,000 ஆக இருந்து வந்தது.

Advertising
Advertising

இந்நிலையில், அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 18,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. ேமலும், ஒரேநாளில் 268 பேர் இறந்தனர். இங்கு மொத்தம் 1304 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சீனா, பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி ஆகிய நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா முதலிடத்திற்கு சென்றுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,991-த்தை எட்டியுள்ளது.  நியூயார்க் நகரில் மட்டுமே 39 ஆயிரம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன் மூலம், கடந்த டிசம்பர் மாதம், முதன் முதலில் கண்டறியப்பட்டு இந்த நோய்த்தொற்றின் மையமாக விளங்கிய சீனா, கடும் உயிரிழப்புகளை சந்தித்து வரும் இத்தாலி ஆகியவற்றுக்கு அடுத்ததாக கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய மையமாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.  இதை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையாக திணறி வருகிறார் அதிபர் டிரம்ப்.

உலகின் பணக்கார, மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதால், 40 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். லட்சக்கணக்கான கடைகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.  விமானம், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இப்போதே சுமார் 30 லட்சம் பேர் வேலை இழந்து, வேலையின்மை சலுகையை பெற அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதார பெருமந்தத்தின் காரணமாக அமெரிக்காவில் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது ஐந்து மடங்கு அதிகம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், கொரானோவை கூட்டாக எதிர்கொண்டு வெல்வதென ஜி20 கூட்டமைப்பு நாடுகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையை சமாளிக்க 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்க உறுதியேற்றுள்ளன.

உலகளவில் 25,000 பேர் பலி 5.5 லட்சம் பேருக்கு பாதிப்பு

உலகளவிலான கொரோனா உயிரிழப்பை பொறுத்த வரையில் அமெரிக்காவை (1,304) விட இத்தாலி (8,215), ஸ்பெயின் (4,365), சீனா (3,292) ஆகியவை அதிக இழப்புகளை சந்தித்துள்ளன. இத்தாலி (712), ஸ்பெய்னில் (769) மட்டுமே 24 மணி நேரத்தில் சுமார் 1500 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் மொத்த பலி எண்ணிக்கை 4,856 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் நேற்று ஒரே நாளில் 144 பேர் இறந்துள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது.  ஸ்பெயினில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. 5 நோயாளிகளுக்கு ஒரு படுக்கை மட்டுமே உள்ளது. இதனால் பலரும் மருத்துவமனை வளாகங்களில் வெற்றுத் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவசர சிகிச்சை மையங்களிலும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், பலருக்கும் போதிய சிகிச்சை தர  முடியாமல் உயிரிழப்புகளை தடுக்க முடியவில்லை என டாக்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். நோயின் உச்சநிலை எப்போது எட்டும் என்பதை துளியும் கணிக்க முடியாதபடி இருப்பதாக ஸ்பெயின் சுகாதார அதிகாரிகள் கூறி உள்ளனர். இதுவரை, உலகளவில் 5.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 25,000 ஆக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒருபுறம் உயிர் பலி அதிகரித்து வரும் நிலையில், மற்றொருபுறம் உலக பொருளாதாரமும் பாதாளத்தை நோக்கி செல்கிறது.

முகக்கவசம் மூலம் சீனாவுக்கு லாபம்

கடந்த பிப்ரவயில் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து முகக்கவசத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது உலக நாடுகள் முழுவதும் முகக்கவசம் அத்தியாவசியமாகி உள்ள நிலையில், சீனாவில் முகக்கவசம் தயாரிக்க புதிதாக 9,000 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்கி 15 நாட்களே ஆன ஆலைகள் கூட  இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிட்டன. இதனால், முகக் கவசத்தை தயாரிப்பது இப்போது பணத்தை அச்சடிப்பதற்கு இணையான லாபத்தை தருவதாக சீன தொழிற்சாலை உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்

அதிபர் டிரம்ப்புடன் சீன அதிபர் பேச்சு

கொரோனா வைரசை சீனா தான் பரப்பியதாகவும், சரியான தகவல் தராமல் உலகையே இக்கட்டில் சிக்க வைத்து விட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை சீனா வன்மையாக கண்டித்தது. ஏற்கனவே இரு நாடுகள் இடையே வர்த்தக போர் ஏற்பட்ட நிலையில், தற்போது கொரோனாவாலும் இருதரப்பு உறவு மிக மோசமடைந்துள்ளது. இந்நிலையில், அதிபர் டிரம்ப்புடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசி மூலமாக பேசி உள்ளார். அப்போது, கொரோனாவுக்கு எதிராக அமெரிக்காவும், சீனாவும் ஒன்றுபட்டு போராட வேண்டுமென வலியுறுத்திய ஜின்பிங், வைரஸ் தொடர்பான தனது அனுபவங்களையும், தகவல்களையும் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து சந்தேகம் தெரிவித்தார். அங்குள்ள உண்மைநிலை யாருக்கும் தெரியாது என அவர் கருத்து தெரிவித்தார்.

ராணுவத்தின் உதவியுடன் தென் ஆப்ரிக்கா முடக்கம்

இந்தியாவைப் போலவே, 5.7 கோடி மக்கள் தொகை கொண்ட தென் ஆப்ரிக்காவும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 3 வார ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு ராணுவ அணிவகுப்புடன் நேற்று தொடங்கியது. ஏற்கனவே அங்கு 927 பேர் பாதிக்கப்பட்டு, 2 பேர் இறந்துள்ளனர். கென்யா, ருவாண்டா, மாலி உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆப்ரிக்க கண்டத்தில் 3,203 பேருக்கு வைரஸ் பரவி உள்ளது. 84 பேர் பலியாகி உள்ளனர். ஆப்ரிக்காவில் பெரும்பாலானவை ஏழை நாடுகள் என்பதால், அங்கு வைரஸ் பரவினால் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Related Stories: