×

மாநிலங்கள் கோரும் நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாராளமாக நடந்து கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: . திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்று நோய் பரவிடாமல் தடுத்திடும் நோக்கில்  பிறப்பிக்கப்பட்டிருக்கும் 21 நாள் ஊரடங்குப் பிரகடனத்தைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான; நிவாரண உதவி திட்டத்தையும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கிக் கடன் வசூலைத் தள்ளி வைக்கும் திட்டத்தையும் திமுக சார்பில் வரவேற்கிறேன். மாநிலங்களுக்கு ‘‘கொரோனா நிதி’’ வழங்கி-கூட்டாட்சித் தத்துவத்தின் உண்மையான நோக்கத்தை வெற்றி பெற வைப்பார் மத்திய நிதியமைச்சர் என்று எதிர்பார்த்தேன். கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகளுக்காக தமிழக அரசு கோரியிருக்கும் 4000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கையுடன், அந்தக் கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் வலியுறுத்துகிறேன்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் பாராமல் அனைவரும் ஓரணியில் நின்று இந்தப் ‘பேரிடரை’ எதிர்த்துப் போராட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். ஆகவே மாநிலங்கள் கோரும் நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையில், திமுக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகிறது.  அதிமுக அரசு அறிவித்துள்ள 3,280 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளுக்கும் வரவேற்பு தெரிவிக்கின்ற நிலையில், அந்த அறிவிப்பில் உள்ள சில குளறுபடிகளை நீக்க வேண்டும். குறிப்பாக 110வது விதியின் கீழ் மார்ச் 24ம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய்” என்று கூறப்பட்டது.

ஆனால் மார்ச் 25ம் தேதி தொலைக்காட்சி உரையில் “அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் நிதியுதவி” என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆகவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய்க்குப் பதில் 5000 ரூபாய் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்ற எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூன்று மாத காலத்திற்கு கடன் தவணைகள், அசல்களை வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதைத் தமிழக அரசின் சார்பில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும்-கூட்டுறவுக் கடன்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மின் கட்டணம், குடிநீர்க் கட்டணம், சொத்து வரி, டிரைலர் லாரிக்கு கட்டப்படும் சாலை வரி உள்ளிட்டவற்றையும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியில் 30-40 நாட்களைக் கடந்த நெற்பயிர்கள் பெரும் பாதிப்பு அடைந்திருக்கின்றன. அறுவடைக்கு தயாரான கடலை பாதிக்கப்பட்டுள்ளது. உளுந்து தெளிக்க முடியாமல் தடைப்பட்டுள்ளது. விவசாயிகளின் பாதிப்பைப் போக்கிடும் வகையில் - தொகுப்பு நிவாரண அறிவிப்பு ஒன்றை முதல்வர் பழனிசாமி உடனடியாக வெளியிட வேண்டும். கொரோனா நோய் தடுப்பிற்கான ஊரடங்கை 99 சதவீதத்திற்கு மேலான மக்கள் அனைவரும் மனமுவந்து ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகள் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளை மக்கள் தவறாமல் கடைப்பிடித்து-ஒரு சிலர் வெளியில் செல்வதையும் தவிர்த்திட வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Central Government ,states ,MK Stalin ,government , States, Finance, Federal Government, MK Stalin
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...