ஆவடி மாநகராட்சியில் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு பொருட்கள் வினியோகம்

ஆவடி: கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளிலிருந்து பொதுமக்கள் வௌியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்க பொதுமக்கள் சென்றாலும், போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாக உள்ளன. இதனால், பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆவடி, பட்டாபிராம், தண்டுரை, சேர்காடு, திருமுல்லைவாயல், அண்ணனூர், கோயில்பதாகை, மிட்டனமல்லி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி, மளிகை கடை உரிமையாளர்களின் முகவரி, செல்போன், பெயர் ஆகியவற்றை வெளியிட்டுள்ளனர். இவர்களை, பொதுமக்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தேவைப்படும் மளிகை, காய்கறி பொருட்களை ஆர்டர் செய்தால், டெலிவரி கட்டணமின்றி வீடுகளுக்கு கொண்டு வந்து விநியோகம் செய்து விடுவார்கள் என அறிவித்துள்ளது.

Advertising
Advertising

இதனையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற அவர்களை தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளலாம். இந்த திட்டம் நேற்று காலை முதல் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் செல்போனில் கொடுக்கும் ஆர்டர்களை வாங்கி ஆட்டோக்கள் மூலம் காய்கறி, மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று வியாபாரிகள் விநியோகம் செய்து வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில், பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு, ஆவடி மாநகராட்சியின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: