விவசாயம், வாகனம், வீட்டு கடனுக்கு 3 மாதம் இஎம்ஐ கட்ட வேண்டாம்: கொரோனா ஊரடங்கு நெருக்கடியிலிருந்து மீள ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

மும்பை: நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்கள் மீள்வதற்காக, ரிசர்வ் வங்கி நேற்று பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில், பொதுமக்கள் வாங்கியுள்ள விவசாயம், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான 3 மாத தவணைகளை  வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூலிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. அதோடு, வட்டி குறைப்பு உட்பட பல்வேறு சலுகை அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.  இந்தியா உட்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் இது சமூக பரவலாக மாறியதால் உயிர் பலியும்,  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அபாயகரமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவுதலை தடுக்க, அடுத்த மாதம் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. தொழில்துறைகள், நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. அன்றாட கூலி வேலை செய்பவர்கள் நிலை மிகவும் பரிதாபமாகி விட்டது. தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், ₹1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண உதவி திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால், நடுத்தர மக்கள் மிகவும் எதிர்பார்த்த மாதாந்திர கடன் தவணை (இஎம்ஐ) தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இடம் பெறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கடன் தவணைகளை தாமதமாக செலுத்த சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.  இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று சில முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது. இதில், இஎம்ஐ தவணை சலுகை உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், வீடியோ கான்பரன்சிங் மூலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் இந்த மாதம் 31ம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த கூட்டம் முன்னதாகவே, கடந்த 24ம் தேதி துவங்கி 3 நாட்களுக்கு நடைபெற்றது.

இதில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் குறைத்து 4.4 சதவீதமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, இந்த கூட்டத்தில் பங்கேற்ற 6 உறுப்பினர்களில் 4 பேர்  ஆதரவு தெரிவித்துள்ளனர். 2 உறுப்பினர்கள் 0.5 சதவீத வட்டி குறைப்பே போதும் என பரிந்துரைத்தனர்,’’ என்றார். வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் அளிக்கும் தங்களது உபரி நிதிக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டியும் 0.9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதோடு, பணம் கையிருப்பு விகிதத்தை ஒரு சதவீதம் குறைத்து 3 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. வங்கிகள் கடன் வழங்குவதை அதிகப்படுத்த இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  மேலும்,  கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் போர்க்கால துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், இதன் ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது.

உணவு பொருட்களுக்கான பண வீக்க விகிதம் வரும் மாதங்களில் குறையலாம். இருப்பினும் வேளாண் துறை தவிர பிற துறைகள் மிகவும் பாதிக்கப்படும். அந்த பாதிப்பு, கொரோனா வைரஸ் தாக்குதல் எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதை பொறுத்து அமையும் எனவும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். 3 மாத தவணை:  கொரோனாவால் வேலையிழப்பு, வருவாய் சரிவு போன்றவை ஏற்பட்டுள்ள நிலையில், கடன் தவணைகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த பரிந்துரை பொருந்தும். கடந்த 1ம் தேதி நிலுவையில் உள்ள கடன்களுக்கு இந்த சலுகையை செயல்படுத்தலாம். கடன் தவணை செலுத்த வங்கிகள் வழங்கும் 3 மாத அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது. 3 மாத கடன் தவணையை செலுத்தாததால் அதனை வராக்க டனாகவும் கருதக்கூடாது என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

இஎம்ஐ சலுகை யாருக்கு பொருந்தும்? இஎம்ஐ கடன் தவணை செலுத்துவதில் விடுமுறை காலமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3 மாத சலுகை காலத்தை வாடிக்கையாளர்கள் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரத்தில், வங்கிகள் இதற்கு அனுமதி வழங்கினால்தான் இந்த சலுகை கிடைக்கும். இதுகுறித்து நிர்வாக குழுவில் வங்கிகள் முடிவு செய்து அறிவிக்கும். இந்த சலுகை தனிநபர் கடன்கள், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள், விவசாய கடன்கள், வாகன கடன்கள், வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன்கள் மற்றும் குறிப்பிட்ட கால அளவி–்ல் நிர்ணயிக்கப்பட்ட பிற கடன்கள் சிலவற்றுக்கும் இது பொருந்தும். கடன் அசல் மற்றும் வட்டிக்கும் சேர்த்து இந்த சலுகை உண்டு. இதுபோல், தொழில் நிறுவனங்களுக்கு குறுகிய கால அளவிலான மூலதன கடன்கள் பண கிரெடிட் அல்லது ஓவர் டிராப்ட் ஆக வழங்கப்படுகின்றன. இவற்றுக்கும் இந்த 3 மாத அவகாசத்தை வங்கிகள் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இவ்வாறு கடன்களுக்கான கால அவகாசம் வழங்கப்பட்ட போதும், அவற்றை தள்ளுபடியாக வாடிக்கையாளர்கள் கருதக் கூடாது. மூன்று மாதங்கள் கழித்து தவணைகளை செலுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில், இந்த மூன்று மாதங்களுக்கான வட்டியையும் சேர்த்துதான் செலுத்த வேண்டும்.

 மேலும், வங்கிகள்தான் இதனை முடிவு செய்ய வேண்டும். பெரும்பாலான வங்கிகள் இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், வங்கியில் இருந்து எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் வந்தால் மட்டுமே இந்த சலுகை உண்டு என்பதை வாடிக்கையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அல்லது, சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் கிளைகளை அணுகி தங்களுக்கு சலுகை உண்டா என்பதை வாடிக்கையாளர்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என வங்கி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 ரிசர்வ் வங்கியின் இந்த சலுகை அறிவிப்பால், சந்தையில் 3.74 லட்சம் கோடி புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதுபோல் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை ஒரு சதவீதம் குறைத்ததால், கடன் வழங்கல் அதிகரித்து, சந்தையில் 1.37 லட்சம் கோடி புழக்கத்துக்கு வர வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 5 சதவீதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கியில் பணம் பாதுகாப்பாக உள்ளது: ரிசர்வ் வங்கி உறுதி

யெஸ் வங்கிக்கு ஏற்பட்ட நெருக்கடியின்போது அந்த வங்கியில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, பின்னர் தளர்த்தப்பட்டது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தனர். தற்போது கொரோனா பீதியில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வருகின்றனர். கடந்த 13ம் தேதியுடன் முடிந்த 15 நாட்களில் மட்டும் சுமார் ₹53,000 கோடி பணத்தை வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து எடுத்துள்ளனர். இத்துடன் சேர்த்து மக்களிடம் ₹ 23 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், ‘‘தனியார் வங்கிகள் உட்பட வங்கிகளில் பணம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. எனவே மக்கள் அச்சப்பட்டு பணத்தை எடுக்க வேண்டாம்’’ என கேட்டுக்கொண்டார்.

அந்நிய செலாவணிகையிருப்பு வீழ்ச்சி

அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 20ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 1,198 கோடி டாலர் சரிந்து 46,990 கோடி டாலராக உள்ளது. இதற்கு முன்பு 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின்போதுதான் இந்த அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி அடைந்தது. 2008ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி அந்நிய செலாவணி கையிருப்பு 1500 கோடி டாலர் சரிந்திருந்தது. இதே போன்ற நிலை 12 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது ஏற்பட்டுள்ளது.

பிரதமர் வரவேற்பு

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை பிரதமர் நரேந்திரமோடி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கொரோனா வைரசால் நமது நாட்டு பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீட்க பாதுகாப்பு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. இதன்மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். வட்டி குறையும். இது நடுத்தர மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு உதவிகரமாக அமையும்,’ என குறிப்பிட்டுள்ளார்.

கிரெடிட் கார்டுக்கு சலுகை உண்டா?

கிரெடிட் கார்டுகளில் பொருட்களை சிலர் தவணை முறையில் வாங்குகின்றனர். தவிர, அத்தியாவசிய அவசர தேவைகளுக்கு பணமாகவும் கிரெடிட் கார்டில் சிலர் எடுத்துக் கொள்கின்றனர். இவற்றை பெரும்பாலான வங்கிகள் பொதுவாக வழங்கப்படும் கடன் வகையில் சேர்ப்பது கிடையாது. எனவே, கிரெடிட் கார்டு தவணைகள், நிலுவைகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என கூறப்படுகிறது. அதேநேரத்தில், கிரெடிட் கார்டு தவணை குறித்த தெளிவான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. எனவே, வங்கிகள் முடிவை பொறுத்து இது அமையும் என வங்கியாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

Related Stories: