ஊரடங்கால் நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலும், தங்கத்தின் விலை ரூ. 33 ஆயிரத்தை தாண்டியது : சவரன் ரூ.33,528-க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.33,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.74 உயர்ந்து ரூ.4,191-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கம் இருந்து வந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பீதியால் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்களுக்கான விற்பனை முடங்கியுள்ள இச்சூழலில் தங்கம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

பொதுவாக, மக்களிடையே தங்கத்துக்கான தேவை குறையும் போது விலை குறைவது வழக்கம். ஆனால் இப்போது தங்கம் விலை உயர்ந்திருப்பது அசாதாரணமாக இருக்கிறது.சென்னையில் இன்று (மார்ச் 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,191 ஆக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.592 உயர்ந்து ரூ.32,528-க்கு விற்பனையாகிறது.  வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.41.70 ஆகவும் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 1,200 உயர்ந்து ரூ.41,700ஆகவும் உயர்ந்துள்ளது.

Related Stories: