×

பிற மாநிலங்களில் சிக்கி தவிக்கும் பீகார் தொழிலாளர்களின் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பாட்னா: கொரோனா ஊரடங்கால் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தங்கள் மாநில தொழிலாளர்களுக்கான செலவை அரசே ஏற்கும் என்று பீகார்  முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீகாரில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்நிலை  கூட்டம்  நேற்று பாட்னாவில் நடைபெற்றது.  முதல்வர் நிதிஷ்குமார் தலைமயில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி,  அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது:

பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ள பீகார் மாநில தொழிலாளர்கள், 3 வாரம் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடும் சிரமத்திற்கு  ஆளாகியுள்ளனர். அவர்களுக்கான செலவுத் தொகையை பிற மாநிலங்களுடன் இணைந்து பீகார் அரசே ஏற்கும். முதல்வர் நிவாரண நிதியில் இருந்து  கொரோனா பாதிப்பு நிவாரணமாக ரூ.100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை கொண்டு ரிக்‌ஷா இழுப்பவர்கள் மற்றும் வீட்டைவிட்டு  வெளியேறி வெகுதொலைவில் வசிக்கும் தினக்கூலிகளுக்கு தங்கும் முகாம்கள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : state ,Bihar ,Nitish Kumar ,states , Other states, Bihar workers, Chief Minister Nitish Kumar
× RELATED இதுபோல் ஆட்டத்தை தொடர விரும்புகிறேன்: ஆட்டநாயகன் நிதிஷ்குமார் பேட்டி