×

நோயாளிகளில் 10% பேர் இறப்பதால் மருத்துவ நிபுணர்கள் அச்சம் கொரோனா பலியில் இத்தாலி முதலிடம்: உலகளவில் பலி 22,000 தாண்டியது

வாஷிங்டன்: உலகளவிலான கொரோனா வைரஸ் பலியில் இத்தாலி முதலிடம் வகிக்கிறது. இங்கு, வைரஸ் பாதித்தவர்களின் இறப்பு விகிதம் 10  சதவீதமாக உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா 22,000 உயிர்களை சூறையாடி உள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் பட்டியலில்  இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 683 பேர் பலியாகினர். தொடர்ந்து 5 நாளாக  தினந்தோறும் 600க்கும்  மேற்பட்டோர் பலியாவது வழக்கமாகி உள்ளது. மொத்த பலி  எண்ணிக்கை 7,503 ஆகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,386 ஆகவும் உள்ளது.  இறப்பு விகிதத்திலும் இத்தாலி 10 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதாவது வைரஸ் பாதித்த 100 பேரில் 10 பேர் அங்கு பலியாகி  வருகின்றனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பவர்களின் சதவீதம் சராசரியாக 3 முதல் 6 சதவீதம் வரை இருக்கிறது.

மருத்துவ நிபுணர்களும் இப்படிதான் இதன் பாதிப்பு இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். ஆனால், இத்தாலியில் 10 சதவீத பலி ஏற்படுவது, அவர்களுக்கு  கவலை அளித்துள்ளது. இத்தாலியில் இதேநிலை தொடர்ந்தால் இன்னும் 6 மாதத்தில், 6 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாடு மிகமிக  மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதே போல், அமெரிக்காவிலும் வைரஸ் தொற்று  தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினமும் அங்கு ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 68,589 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 247 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 1,032 ஆக  அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக நியூயார்க்கில் மட்டும் 33 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் 81,660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒருவாரமாக நேற்றும் சீனாவில் உள்நாட்டினர் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.  வெளிநாட்டிலிருந்து வந்த 40 பேருக்கு புதிதாக வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 3,287 ஆக உள்ளது. ஸ்பெயினில் பலி  எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஐரோப்பாவில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை  தெரிவித்துள்ளது. லண்டன் மருத்துவமனைகளில் சுனாமியைப் போல் வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை பெருகி வருவதாக அந்நாட்டின் தேசிய  சுகாதார மையம் கூறி உள்ளது.

உலகம் முழுவதும் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரமாக உள்ளது. பலி எண்ணிக்கை 21,315 ஆக உள்ளது.  கொரோனாவால் தினசரி உலகம் முழுவதும் சுமார் 2,500 பேர் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையே, கொரோனா குறிப்பிட்ட சீசன்  தோறும் பரவக்கூடிய நோயாக மாறலாம் என எச்சரித்துள்ள விஞ்ஞானிகள், இதற்கான தடுப்பு மருந்தையும், எதிர்ப்பு மருந்தையும் விரைந்து கண்டறிய  வேண்டியது அவசியம் என வலியுறுத்தி உள்ளனர்.

அரண்மனையில் 7 பேருக்கு பாதிப்பு மலேசிய மன்னர், ராணிதனிமைபடுத்தப்பட்டனர்
மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவும், அவரது மனைவி துன்கு இஸ்கன்தாரியா வசிக்கும் அரண்மனையில் 7  பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி, மன்னரும், ராணியும்  அரண்மனையில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரண்மனை முழுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி  தீவிரமாக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இதுவரை கொரோனாவுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியா வெல்லும்; சீனா நம்பிக்கை
சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, இந்தியா விமானம் மூலமாக 15 டன் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தது. இதற்கு  நன்றி கூறும் விதமாக, கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான தனது மருத்துவ அனுபவங்களை சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன்  வீடியோ கான்பரன்சிங் மூலமாக சமீபத்தில் பகிர்ந்து கொண்டது. இந்நிலையில், டெல்லியில் சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங்க் நேற்று  வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் தேவையை கருத்தில் கொண்டு, எங்களின் திறனுக்கு ஏற்ப சிறந்த ஆதரவையும், உதவிகளையும் வழங்க  சீனா தயாராக இருக்கிறது. ஆரம்ப கட்டத்திலேயே இந்திய மக்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவார்கள் என்று நாங்கள்  நம்புகிறோம். மனித குலத்தின் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் காக்க எங்கள் அனுபவத்தையும் சக்தியையும் வழங்குவோம்’’ என்றார்.

Tags : coronation deaths ,Italy ,experts ,Corona , Patients, Medical Specialists, Corona Kills, Italy
× RELATED கொரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை...