×

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை போக்க 377 லட்சம் கோடி முதலீடு: ஜி- 20 நாடுகள் அறிவிப்பு

ரியாத்: கொரோனா பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்க, 377 லட்சம் கோடி நிதியை முதலீடு செய்வதாக ஜி-20  அமைப்பு நாடுகள் அறிவித்துள்ளன. ஜி-20 நாடுகளின் பொருளாதாரம் இந்தாண்டு மோசமான பாதிப்பை சந்திக்கும் என மூடிஸ் நிறுவனம்  தெரிவித்துள்ளது.  இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில், ஜி-20 அமைப்பு தாமதமாக செயல்படுவதாக விமர்சனம் செய்யப்பட்டது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்க ஜி-20 கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், சீன அதிபர்  ஜின்பிங் ஆகியோர் வலியுறுத்தினர். மேலும், ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, சர்வதேச சந்தையில்  விலையை குறைத்தது. இதற்கு  போட்டியாக சவுதியும் உற்பத்தியை அதிகரித்தது.

இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. இந்த கச்சா எண்ணெய் விலை போரை முடிவுக்கு  கொண்டு வர வேண்டும் எனவும் சவுதியை, அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், சவுதி தலைமையில் ஜி-20 நாடுகளின் ஆன்லைன்  மாநாடு நேற்று தொடங்கியது.  இது குறித்து டிவிட்டரில் தகவல் தெரிவித்த சவுதி மன்னர் சல்மான், ‘கொரோனா கொள்ளை நோயால், சுகாதாரம்,  மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள சவால்களை உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள நிலையில், நாம் இணைந்து செயல்பட்டு பிரச்னைக்கு தீர்வு  காண ஜி-20 கூட்டத்தை கூட்டி உள்ளோம்,’ என குறிப்பிட்டுள்ளார். இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் காணொளி காட்சி  மூலம் உரையாற்றினர்.  இதில் ஸ்பெயின், ஜோர்டன், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின்  தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர்.  பிரதமர் மோடியும் இதில் பேசுகிறார்.

மேலும், உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் தலைவர்களும் பங்கேற்று பேசினர். அப்போது, ஏழை நாடுகள் கடனை திருப்பிச் செலுத்துவதை  நிறுத்தி வைக்க வேண்டும் என ஜி-20 நாடுகளின் தலைவர்களிடம் இவர்கள் வலியுறுத்தினர். மாநாட்டுக்குப் பின் ஜி-20 தலைவர்கள் வெளியிட்ட  அறிக்கையில், ‘கொரோனா கொள்ளை நோயால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொள்ள, நிதி கொள்கை, பொருளாதார  நடவடிக்கைகள் மற்றும் உத்தரவாத திட்டங்களில் 377 லட்சம் கோடிக்கும் (5 லட்சம் கோடி டாலர்) அதிகமான நிதி முதலீடு செய்யப்படும். வளரும்  நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க சர்வதேச நிதியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் மண்டல வங்கிகளுடன் உடனடியாக இணைந்து செயல்படுவோம்,’  என கூறியுள்ளனர்.

வளர்ந்த நாடுகளுக்கு உதவி சவுதி மன்னர் வேண்டுகோள்
மாநாட்டில் ஜி-20 அமைப்பின் தலைவர் சவுதி மன்னர் சல்மான் ஆற்றிய துவக்க உரையில், ‘‘கொரோனா கொள்ளை நோய் தாக்குதலுக்கு, நாம்  வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுத்து உலக பொருளாதாரத்தில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இந்த மனித  பிரச்னைக்கு உலகளாவிய நடவடிக்கை தேவை. இந்த சவாலை எதிர்கொள்ள நாம் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என இந்த  உலகம் நினைக்கிறது. இப்பிரச்னையில் இருந்து வளரும் நாடுகள் மீண்டு, தங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்த வளர்ந்த நாடுகள் உதவிக்கரம் நீட்ட  வேண்டும்,’’ என்றார்.



Tags : G20 ,countries ,Corona , Corona, Economic Impact, G-20 Countries
× RELATED மக்களவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம்...