×

செய்தி துளிகள்

சீனாவில் மீண்டும் 67 பேருக்கு பாதிப்பு: சீனாவில் கடந்த இரு தினங்களாக புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பரவவில்லை. இந்நிலையில்,  தேசிய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், `‘சீனாவில் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47  ஆக இருந்தது. வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாட்டினர்.  ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் வுகானில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை. அதே நேரம் நேற்று முன்தினம் உயிரிழந்த 6  பேருடன் சேர்த்து சீனாவில்  பலியானவர்களின் எண்ணிக்கை 3,287 ஆக உயர்ந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

7 லட்சம் பரிசோதனை உபகரணம் கொள்முதல்: ஐசிஎம்ஆர் நடவடிக்கை: ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்’ (ஐசிஎம்ஆர்) நேற்று வெளியிட்ட  அறிக்கையில் கூறியிருப்பதாவது: `கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு தேவையான 7 லட்சம் உபகரணங்களை அமெரிக்கா, ஐரோப்பா, இந்திய  மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்), இந்திய தேசிய வைராலஜி நிலையம் ஆகியவற்றிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இதுபோல், இந்தியாவில் உள்ள வினியோகஸ்தர்களுடன் தொடர்பில் இருக்கும் வேறு எந்த நாட்டை சேர்ந்த உற்பத்தியாளரும் இதற்கான ஒப்பந்த  புள்ளிகளை அளிக்கலாம்.

இந்த மருத்துவ பரிசோதனை உபகரணங்கள், சென்னை,  ஐதராபாத், மும்பை, டெல்லி, திப்ருகர், போபால் உள்ளிட்ட நகரங்களில் உள்ள  ஐசிஎம்ஆர்  மண்டல அலுவலகங்களுக்கு வினியோகிக்கப்பட வேண்டும். உற்பத்தியாளர்கள் முதல் வாரத்திலும், அதற்கு அடுத்து வரும் வாரங்களிலும்  தங்களால்  எவ்வளவு உபகரணங்கள் வினியோகிக்க முடியும் என்ற விவரங்களுடன் ஒப்பந்த புள்ளி அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு இந்தியசமையல்காரர் பலி:
இந்தியாவை சேர்ந்த சமையல்காரர் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானார்.மும்பையில் உள்ள பிரபல ஓட்டலில் சமையல் கலை நிபுணராக  தொழில் செய்து வந்தவர் பிளாய்ட் கார்டாஸ். மும்பையில் இரண்டு ரெஸ்டாரண்டுகளை நடத்தி வந்தார். அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில்  ஹங்கர் என்ற ஓட்டலையும் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். தனது மனைவி குழந்தைகள் மற்றும் தாயுடன்  வசித்து வந்த இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நியூஜெர்சியில் உள்ள மவுண்டெய்ன், மெடிக்கல் சென்டரில்  கடந்த 18ம் தேதி சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, அவர் தனக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் தகவல்  வெளியிட்டுள்ளார். தனக்கு அதிக காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று  முன்தினம் கொரோனா தாக்குதலுக்கு பலியானார். அவர் மும்பைக்கு வந்திருந்தபோது அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உரிய மருத்துவ  சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மும்பை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கார்டாஸ் மறைவுக்கு அவரது வாடிக்கையாளர்களான  பிரபல நடிகர் ராகுல்போஸ் உள்ளிட்ட நடிகர்களும், இந்தியாவை சேர்ந்த பிரபல சமையல் கலை நிபுணர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

எடியூரப்பா வீடு அருகே கொரோனா நோயாளிகள்: அவசரமாக வீடு மாறுகிறார்:
கர்நாடகாவில், பெங்களூரு  டாலர்ஸ் காலனியில் முதல்வர் எடியூரப்பாவின் வீடு அமைந்துள்ளது. வழக்கம் போல்  காலையில் நடைபயிற்சி  மேற்கொள்வதையும் எடியூரப்பா தவிர்த்து  வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். நேற்று முன்தினம், யுகாதி பண்டிகை என்பதால்  வீட்டிலேயே பூஜை  செய்து சாமியை வழிபட்டார். இந்நிலையில், டாலர்ஸ்  காலனியில் உள்ள முதல்வரின் இல்லம்  அருகே கொரோனா நோய் பாதித்த 5 பேர்கள்   கண்டறியப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  அரசு இல்லமான காவிரியில் குடியேற முதல்வர் எடியூரப்பா முடிவு  செய்துள்ளார். இதற்காக பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள்  நேற்று அங்கு சென்று  காவிரி இல்லத்தை தூய்மைபடுத்தியதுடன் வீட்டை சுற்றிலும் கிருமிநாசினி  தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இன்று முதல்  எடியூரப்பா அரசு  இல்லமான காவிரியில் குடியேற திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி  உள்ளது.

Tags : China , China, 67 affected, coronavirus
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்