கொரோனா ஊரடங்கு பாதிப்புக்கு நிவாரணம் அறிவித்தது மத்திய அரசு: 1.70 லட்சம் கோடிக்கு நிதியுதவி: 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி

* 8.69 கோடி விவசாயிகளுக்கு 2000

* 20 கோடி பெண்களுக்கு மாதம் 500

* விதவைகள், மூத்த குடிமக்களுக்கு 1000

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறைகள் முடக்கப்பட்டு, ஏழை மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு 2,000, அடுத்த மூன்று மாதங்களுக்கு கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசம் உட்பட  1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அடுத்த மாதம் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் தவிர, ஏராளமான நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள், ஆட்டோமொபைல் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள், நகை விற்பனை, உணவு தொழில்கள், சுற்றுலா துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அன்றாட தொழிலாளர்கள் நிலை பரிதாபமாக மாறியுள்ளது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ள 21 நாள் முடக்க நடவடிக்கையால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் சரிவை சந்திக்கும் என நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன. சுமார் 9 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தக இழப்பு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் மற்றும் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த நிதியமைச்சர் தலைமையில் சிறப்பு குழுவை பிரதமர் நரேந்திரமோடி அமைத்து உத்தரவிட்டார். கூட்ட ஆலோசனை முடிந்த நிலையில், 1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அப்போது, ஏழைகள் ஒருவர் கூட பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். அறிவிப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* மருத்துவ காப்பீடு: மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஷா அல்லது அரசு சுகாதார பணியாளர்களுக்கு தலா 50 லட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படும்.

* கரீப் கல்யாண் அன்ன யோஜனா: இந்த திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு ரேஷன் கார்டு வைத்துள்ள 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும்.

 * பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் முதல் கட்டமாக ₹2,000 உடனடியாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும். இதன் மூலம் 8.69 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒரு நாள் கூலி, 182ல் இருந்து 202 ஆக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.

* ஏழ்மை நிலையில் உள்ள மூத்த குடிமக்கள், கணவனை இழந்தவர்கள், மாற்று திறனாளிகளுக்கு 1,000 கருணைத்தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும். இதனால் 3 கோடி பேர் பயன் அடைவார்கள்.

* ஜன்தன் திட்டத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 20.5 கோடி பெண்களுக்கு, மாதம் 500 வீதம் அடுத்த 3 மாதங்களுக்கு அவர்களின் குடும்ப செலவுக்காக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

* உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் காஸ் இணைப்பு பெற்ற, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

* மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பிணையில்லா கடன் வரம்பு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் 7 கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.

* கட்டுமான தொழிலாளர்களுக்கான நல நிதி ₹31,000 கோடியில் இருந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசுகள் வழங்கலாம்.

* இதுபோல், மாநில அரசுகள் தங்கள் நிதியில் இருந்து மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட சுகாதார சேவைகளை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

10 தொழிற்சங்கங்கள் பிரதமருக்கு கடிதம்

ஐஎன்டியுசி, ஏஐடியுசி உட்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள், பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு உத்தரவால் கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் வருவாயை இழந்து கடுமையாக பாதித்துள்ளனர்.  இவர்கள் உயிர் வாழ்வதற்காக மத்திய அரசு ரூ.5 லட்சம் கோடி முதல் ரூ.7 லட்சம் கோடி வரையிலான நிதியுதவியை உடனடியாக அறிவிக்க வேண்டும். சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சில்லரை வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்களும் கடுமையாக பாதித்து இருப்பதால், அவர்களுக்கு சலுகைகள், கடன் தவணை சலுகைகளை அறிவிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் மற்றும் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்க அனுமதிக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு உடனடியாக நிதியுதவி தேவைப்படுவதால், இலவச ரேஷன் மற்றும் எரிபொருள் வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் மூலம் வழங்க வேண்டும். நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு அவசர உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான சிறப்புக் குழு, வருமான வரி தாக்கல், ஜிஎஸ்டி தாக்கல் போன்வற்றின் காலக்கெடுவை நீட்டிப்பதாக மட்டுமே அறிவித்துள்ளது. இது பெரிய தொழில்கள் செய்பவர்கள் பயன் பெறுவதாக உள்ளது. சாதாரண தொழிலாளர்கள் 40 கோடி பேரின் நலனுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. தனியார் துறைகளின் சிக்கன நடவடிக்கையால் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம், சம்பளம் இல்லா கட்டாய விடுப்பு அளிப்பது போன்றவை நடக்கின்றன. இதை அரசு உடனடியாக தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இஎம்ஐ பற்றி அறிவிப்பு வருமா?

தொடர்ந்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அன்றாட தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர் வேலையின்றி தவிக்கின்றனர். வருமானத்துக்கும் வழியில்லை. இதனால், தங்கள் வீட்டு வாடகை, வங்கியில் வாங்கிய கடன் தவணைகளை அடைக்க வழியின்றி திண்டாடுகின்றனர். இதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மத்திய அரசு ஏதேனும் சலுகை வழங்குமா என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் இஎம்ஐ கடன் தவணை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படுமா அல்லது வேறு சலுகைகள் எதுவும் உள்ளதா என்பது குறித்த அறிவிப்பு இடம்பெறாதது மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

நிவாரண நிதி போதாது யெச்சூரி குற்றச்சாட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண தொகுப்பில், வெளிமாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து தங்கியுள்ள தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவது தொடர்பான அறிவிப்பு இடம் பெறவில்ைல. 3 மாதத்துக்கு ஒரு குடும்பத்துக்கு தருவதாக அறிவித்துள்ள ஒரு கிலோ பருப்பு, உணவு தானியங்கள், கேஸ் சிலின்டர் ஆகியவை போதாது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 5000 வழங்க வேண்டும்,’ என வலியுறுத்தி உள்ளார்.

பிஎப் பணம் எடுக்க சலுகை

குழந்தைகளின் படிப்புச் செலவு, திருமணம், மருத்துவ சிகிச்சை, வீடு வாங்குவது போன்ற தேவைகளுக்காக தொழிலாளர்கள் தங்கள் பிஎப் நிதியில் இருந்து முன்பணமாக எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பால் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் பலன் அடையும் வகையில் சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தொழிலாளர்கள் பிஎப் திட்டத்தில், 15,000க்கு கீழ் சம்பளம் பெறும் தொழிலாளர் பங்களிப்பு 12 சதவீதம் மற்றும் நிறுவனங்கள் பங்களிப்பு 12 சதவீதம் சேர்த்து 24 சதவீத பிஎப் பங்களிப்பை அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசே செலுத்தும்.

100 தொழிலாளர்கள் வரை உள்ள நிறுவனங்களுக்கே இந்த சலுகை பொருந்தும். இதுபோல், பிஎப் நிதியில் இருந்து 75 சதவீதம் அல்லது மூன்று மாத சம்பளம் ஆகியவற்றில் எது குறைவோ அதை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் சுமார் 4.8 கோடி தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>