×

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காக ரூ8 கோடி நிதி வழங்கினார் ரோஜர் பெடரர்

போட்மிட்ஜன் (ஸ்விட்சர்லாந்த்):  ஸ்விட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சிகிச்சைக்காக, அந்நாட்டு டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் ரூ.8 கோடி நிதி வழங்கியுள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், விளையாட்டு உலகை மொத்தமாக முடக்கி போட்டு விட்டது. இந்த ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான, பிரெஞ்ச் ஓபன், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. ஒலிம்பிக் போட்டிகளும், ஓராண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டி விட்டது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. ஸ்விட்சர்லாந்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விரைவான சிகிச்சை ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரமும், ஏடிபி தரவரிசையில் அதிக காலம் நம்பர் 1 இடத்தில் நீடித்திருந்த சாதனைக்கு உரியவரான ரோஜர் பெடரர், கிட்டத்தட்ட 8 கோடி ரூபாயை, அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் சிகிச்சைக்காக இந்த தொகையை மனமுவந்து கொடுப்பதாக ரோஜர் பெடரரும், அவரது மனைவி மிர்காவும் தெரிவித்துள்ளனர். ‘‘கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி, உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு விரைவான சிகிச்சை கிடைக்க வேண்டும். அதற்காக இந்த தொகையை நாங்கள் வழங்குகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைய வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய ஒரே நோக்கம். விளையாட்டு எல்லாம் அப்புறம்தான்’’ என்று இருவரும் கூட்டாக தெரிவித்துள்ளனர். ரோஜர் பெடரரின் மனைவி மிர்காவும், டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2000ம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக்சில் நாட்டுக்காக இருவரும் ஆடிய போது, பழக்கம் ஏற்பட்டு, காதலாகி, பின்னர் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2002ல் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, மிர்கா டென்னிஸ் விளையாட்டை தியாகம் செய்து விட்டார். 2009ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டு இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். மறுபடியும் 2014ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். தற்போது கொரோனா காரணமாக கிடைத்துள்ள இந்த ஓய்வை, குழந்தைகளுடன் முழுவதுமாக செலவிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று ரோஜர் பெடரர் கூறியுள்ளார்.


Tags : Roger Federer ,victims ,Corona , Corona, Finance, Roger Federer
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...