சென்னை புறநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவை மதிக்காதவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டினர்: முக்கிய சாலைகள் வெறிச்சோடியது

ஆவடி: தமிழகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால் கடைகள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்து அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. முக்கிய சாலை சந்திப்பில் தடுப்பு அமைத்து வாகன போக்குவரத்தை தடுத்து வருகின்றனர். தேவையில்லாமல் சாலையில் செல்பவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்.

நேற்று காலை அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், பாடி, திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், குன்றத்தூர், மாங்காடு, நசரத்பேட்டை, புழல், செங்குன்றம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் கார், பைக்குகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து கடுமையாக எச்சரித்தனர். சில இடங்களில் பைக்கில் சென்றவர்களை போலீசார் அடித்து விரட்டினர். ஒருசில கடைகளை திறந்துவைத்திருந்தவர்களை போலீசார் எச்சரித்து கடையை மூட வைத்தனர்.

சிடிஎச் சாலை, அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, கொல்கத்தா நெடுஞ்சாலை, ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலை, பட்டாபிராம்- பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலை, புதிய ராணுவ சாலை, சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் வண்டலூர்- நெமிலிச்சேரி 400 அடி வெளிவட்ட சாலை, தாம்பரம்- புழல் புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து பெரிய, சிறிய கம்பெனிகளும் மூடப்பட்டிருந்தன. சில இடங்களில் சிறிய ஓட்டல்கள் திறந்திருந்தன.

இதுபற்றி சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில், ‘’கொரோனா வைரஸ் பரவுதை தடுக்கவும் பொதுமக்களுக்கும் அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் வைரஸ் பாதிப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இதில் யாரும் அலட்சியம் காட்டவேண்டாம்’ என்றனர்.

Related Stories: