கோயில், கோயிலாக அலைக்கழித்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு வாலாஜா கோயிலில் திருமணம்: 25 பேருடன் எளிமையாக நடந்தது

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காமராஜர் நகரை சேர்ந்தவர் சஞ்சீவி, பட்டு நெசவு தொழிலாளி. இவரது மகன் ராஜ்குமார் (31). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவருக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த பாலன்-சரோஜா தம்பதியரின் மகள் கமலா(28) என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான மண்டபத்தில் இன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பிதழ்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருப்பதியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களும் மூடப்பட்டன. இத்தகவல் சஞ்சீவி குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் வாலாஜாவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால் போலீசார் கெடுபிடி செய்வதால் இங்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று கோயில் நிர்வாகத்தினர் மணமகன் வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக வாலாஜா வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்தை அணுகினர்.

அப்போது அவர்களும், ‘போலீசார் அனுமதி வழங்கினால் மட்டுமே திருமணம் நடத்த முடியும்’ என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீஸ் உயரதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினர். அதிகம்பேர் கூடக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று காலை 7.30 மணியளவில் திருமணம் நடந்தது. அப்போது மணமக்கள் மாஸ்க் அணிந்திருந்தனர். 500க்கும் மேற்பட்ேடாருக்கு அழைப்பிதழ் அனுப்பிய நிலையில்  25 பேருடன் மட்டுமே திருமணம் நடந்தது. அதன்பின்னர் மணமகன் வீட்டில் எளியமுறையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

‘சார், நான்தான் மணப்பெண்...’

144 தடை உத்தரவு காரணமாக பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளது. உரிய காரணம் தெரிவித்தால் மட்டுமே போலீசார் வாகனங்களை அனுமதிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட மணமகள் கமலா, வேலூருக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். திருமணத்தையொட்டி நேற்று மாலை வேலூரில் இருந்து காரில் புறப்பட்டார். ஆனால் வழியில் பல இடங்களில் இவர்களது காரை அனுமதிக்கவில்லை. அப்போது கமலா, ‘சார், நான்தான் மணப்பெண். எனக்கு நாளை திருமணம்’ எனக்கூறினார்.

அப்போது போலீசார், ‘திருமண அழைப்பிதழை காட்டுங்கள்’ எனக்கேட்டு அதனை வாங்கி பார்ப்பதும், திருப்பதியில் நடக்கவேண்டிய திருமணத்திற்கு வாலாஜாவுக்கு ஏன் செல்கிறீர்கள்?’ எனக்கேட்பதும். அதற்கு மணமகள் மற்றும் காரில் வந்த உறவினர்கள் விளக்கம் கொடுப்பதும் போன்ற சம்பவம் பல இடங்களில் நேரிட்டது. இதன்பின்னரே அவர்களால் வாலாஜாவுக்கு செல்ல முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>