இந்தியாவில் கொரோனா சமூகங்களுக்கு இடையே பரவவில்லை: மேலும் கொசுக்கள் மூலமும் பரவாது...மத்திய சுகாதாரத் துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகங்களுக்கு இடையே பரவவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்படும் வேகம் குறைந்துள்ளது. சமூக பரவல் இல்லை என்றாலும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 22,020 உயிரிழந்த நிலையில், கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லால் அகர்வால் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது;

* கொரோனா வைரஸ் சமூகங்களுக்கு இடையே பரவவில்லை.

* கடுமையாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் ரத்த மாதிரி சோதனை அடிப்படையில் சமூக பரவல் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

* கொரோனா வைரஸ் மூலம் இந்தியாவில் புதிதாக பாதிக்கப்படும் வேகம் குறைந்துள்ளது.

* சமூக பரவல் இல்லை என்றாலும் மக்கள் தீவிர எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

* கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது என்பதை மக்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் கொசு மூலம் பரவும் என வதந்தி பரப்பினால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்தியாவில் தற்போது வரை 15 லட்சத்து 24 ஆயிரத்து 266 பயணிகள் விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

* இதுவரை 22 ஆயிரத்து 928 ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

* அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் கொரோனா  சமூக பரிமாற்ற கட்டம் தொடங்கும். சமூக விலகல் மற்றும் சிகிச்சையை நாம் சரியாக பின்பற்றினால் அது இந்தியாவில் ஒருபோதும் நடக்காது.

* வேண்டுகோளின் பேரில் கொரோனா பிரத்யேக மருத்துவமனைகளுக்கான பணிகள் சுமார் 17 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>