144 தடை உத்தரவை மீறுதல், வதந்தி பரப்புதல் குற்றத்திற்காக 1,500 வழக்குகள் பதிவு; 5 வாகனங்கள் பறிமுதல் : தமிழக காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் அவசியமின்றி வெளியே வருவோர் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் 650க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழ்நாட்டிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் வெளியே வர கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. . இருப்பினும், நேற்று பல நகரங்களில் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடினார்கள். அவர்களை காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். சில இடங்களில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதங்கள் செய்தனர்.இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று நோய் தடுப்பு மற்றும் பேரிடர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 70 வழக்குகள், திருச்சி மாநகரில் 25 வழக்குகள், தேனி மாவட்டம் போடியில் 5 கடை உரிமையாளர்கள் உட்பட பல்வேறு இடங்களில் மொத்தம் 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில்  நேற்று காவல்துறை ஆணையர் 144 தடை உத்தரவை மீறினால் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது அந்த உத்தரவு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொது மக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும்.

Related Stories: