×

2 நாள் விடுமுறை ரத்து: நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செயல்படும்...வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி  21.200 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 26 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள், தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசும் பால், காய்கறி, உணவுப் பொருட்கள், மருத்துவம், தண்ணீர், ஊடகம் தவிர மற்ற முக்கியமில்லாத விஷயங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி அத்தியாவசியமின்றி யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு  எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருந்தாலும், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் இயங்கும் என காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மற்றும் நாளை மறுநாள் 27, 28ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 2 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக சேராமல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள காவல்துறை உறுதியளித்துள்ளதால், நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் மார்க்கெட் செயல்படும் என சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  

பால் விற்பனை:

இதற்கிடையே, தமிழகத்தில் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  தமிழகம் முழுவதும் அதிகாலை 3.30மணிக்கு தொடங்கும் பால் விற்பனை காலை 9 மணிக்கு முடிவடையும். நாளை முதல் பால் முகவர்கள் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டார்கள் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Coimbatore Vegetable Market ,Federation of Traders , 2-Day Holiday Cancellation: The Coimbatore Vegetable Market will operate as usual tomorrow and tomorrow ...
× RELATED கொரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு ரத்து...