கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி?: காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 21,200 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 14 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 640ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில்  தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக அரசும் பால், காய்கறி, உணவுப் பொருட்கள், மருத்துவம், தண்ணீர், ஊடகம் தவிர மற்ற முக்கியமில்லாத விஷயங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலரது  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை  உத்தரவை மீறி அத்தியாவசியமின்றி யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு  எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முகக்கவசம் அணிந்தப்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணோலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலவரம் குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்தும் ஆட்சியர்களிடம் கேட்டறிந்து வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர்அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: