நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 325 காசாக உயர்வு

நாமக்கல்: மூன்றாவது நாளாக நேற்றும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 325 காசாக உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 3 நாளில் 125 காசு வரை உயர்ந்துள்ளது. கடந்த 23ம் தேதி 25 காசு, நேற்று முன்தினம் 50 காசு என முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை உயர்த்திய  என்இசிசி  நேற்றும் முட்டை விலையில் 50 காசு உயர்த்தியுள்ளது. இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 275 காசில் இருந்து 325 காசாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக, முட்டை விற்பனை, நாடு முழுவதும் இம்மாதத்தின் துவக்கத்தில் இருந்து சரிந்தது. இதனால் பண்ணைகளில் ஒரு முட்டை ₹1க்கு விற்பனையானது. பண்ணையாளர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு முட்டைகளை சொந்த வாகனங்களில் எடுத்துச்சென்று கூவி, கூவி விற்பனை செய்தனர்.

தற்போது நாடு முழுவம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் என்இசிசி தொடர்ந்து முட்டை விலையை உயர்த்தி வருகிறது. ஆனால் வியாபாரிகள் அந்தளவுக்கு முட்டை விலையை உயர்த்த வில்லை. என்இசிசி விலையில் இருந்து 70 முதல் 80 காசு குறைத்து தான் வாங்கி செல்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், தற்போது கேரளாவில் முட்டை விற்பனை சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் காய்கறி தட்டுப்பாடு காரணமாக முட்டையை மக்கள் விரும்பி வாங்கத் தொடங்கியுள்னர். இதன் காரணமாக முட்டை விலை உயரத் தொடங்கியுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி தினமும் 1 கோடி அளவுக்கு குறைந்துவிட்டது. உற்பத்தி குறைவு, விலை குறைவு போன்ற காரணங்களால், விற்பனை அதிகரிக்கத் தொடங்கி விட்டது. வெளி மாநிலங்களில் இருந்து கோழித்தீவனம் ஏற்றி வரும் வாகனங்களை, தமிழகத்துக்குள் வர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Stories: