×

சேலம் வந்திருந்த இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர் சென்னை வழிகாட்டிக்கு கொரோனா உறுதி: கோரன்டைன் வார்டில் தீவிர சிகிச்சை

சேலம்: சேலத்திற்கு வந்த இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர், சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி என 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனை கொரோனா தனிமை வார்டில் தீவிர   சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 18 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று சேலத்தில் இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேருக்கும், சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா நாட்டை சேர்ந்த இஸ்லாமிய ஆன்மிக குழுவினர் 11 பேர் கடந்த 11ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து கார்களில் 12ம் தேதி சேலம் வந்தனர். இந்த குழுவினர் கடந்த 12ம் தேதி சூரமங்கலம் ரஹமத்நகர் மசூதியிலும், 13ம்தேதி முதல் 15ம் தேதி வரை செவ்வாய்ப்பேட்டை பாரா மார்க்கெட் மசூதியிலும் தங்கியிருந்து தொழுகை தொடர்பான பாட வகுப்புகள் நடத்தியுள்ளனர். தொடர்ந்து 16ம் தேதி  முதல் 18ம் தேதி வரை பொன்னம்மாப்பேட்டை ஷேக்உமர் மசூதியிலும், 19ம்தேதி முதல் 21ம்தேதி வரை சன்னியாசிகுண்டு புகாரியா மசூதியிலும் தங்கியுள்ளனர்.

22ம்தேதி களரம்பட்டி ஜன்னத்துல் பிர்தவுஷ் மசூதியில் தங்கி மதபோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.  தொடர்ந்து 24ம் தேதிவரை அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தவர்கள், பின்னர் மேட்டூர், வாழப்பாடி பகுதிகளில் உள்ள  மசூதிகளுக்கு சென்றுவிட்டு 7ம்தேதி இந்தோனேசியா புறப்பட திட்டமிட்டிருந்தனர்.  
இதற்கிடையே  மத்திய அரசு,  மக்கள் ஊடரங்கு அறிவித்த 22ம்தேதி இரவு, களரம்பட்டி பகுதியில் இந்தோனோசியாவை சேர்ந்த உலமாக்கள், அனுமதியின்றி தங்கியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர், போலீசாருடன் சென்று 11 பேரிடமும் விசாரணை நடத்தினர். அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களோடு உடனிருந்த சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி உட்பட 5 பேரையும் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த 16பேரின் சளி மற்றும் ரத்தம் பரிசோதனைக்கு கடந்த 23ம் தேதி அனுப்பப்பட்டது.  

இதில் இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர் மற்றும் சென்னை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் என்று 5 பேரை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. 5  பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  நேற்று டிவிட்டரில் அறிவித்தார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் முறையே 46, 38, 29, 50, 63 வயதுடையவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 5 பேரும் கொரோனா  தனிமைப்படுத்தும் (கோரன்டைன்) வார்டுக்கு மாற்றப்பட்டு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சேலத்தில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இதனால் அரசு மருத்துவமனை ஊழியர்களிடையே பதட்டம் உருவாகியுள்ளது.இதையடுத்து அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் என ஊழியர்கள் அனைவருக்கும் கை சுத்திகரிப்பு மருந்துகள், முகக்கவசம் வழங்கப்பட்டது.

350 பேர் கண்காணிப்பு 80 வீடுகளில் நோட்டீஸ்
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா பாதித்த வர்களுடன் தொடர்பில் இருந்த 350 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், கைகளில் முத்திரையிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்கள் வசித்து வரும் 80 வீடுகளிலும், தனிமைப்படுத்தப்பட்டதற்கான அடையாள நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என்றனர்.

Tags : Salem ,Chennai ,Coroner ,Indonesia , Coroner confirms,Chennai guide, 4 people , Salem
× RELATED சேலத்தில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு