அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி 2,188 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு: வங்கிகள் மூலம் வழங்க ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: ஊரடங்கு உத்தரவை அடுத்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1000 வழங்கும் திட்டத்துக்கு 2,188 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘கொரோனா நோய் தொற்றை தடுக்க 24ம் தேதி (நேற்று முன்தினம்) மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  இதனால் தினக்கூலிகள், விவசாய கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதை சமாளிக்க, அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் தலா 1000 நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் உணவு மற்றும் கூட்டுறவு துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக 2014 கோடியே 80 லட்சத்து 68 ஆயிரமும், சர்க்கரை, பருப்பு, எண்ணெய் வழங்க 173 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரம் என மொத்தம் 2,188 கோடி நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிடப்படுகிறது.

அனைத்து மக்களுக்கும் இந்த ஆயிரம் ரூபாய் சென்று சேர்வதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அதனை கண்காணிக்கவும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாயை பெற விருப்பமில்லாதவர்கள் பொது விநியோக திட்ட இணையதளத்தில் பதிவு செய்து அதனை வாங்காமல் தவிர்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அரசு அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் சுமார் 1.96 கோடி பேருக்கு தலா 1000 கிடைக்கும்.  அதே நேரம், ரேஷன் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாயை நேரடியாக அரசு செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>