கொரோனா தடுப்பு நடவடிக்கை சென்னை முழுவதும் 400 இடங்களில் வாகன சோதனை

* 144 உத்தரவை தொடர்ந்து மீறினால் தொற்று நோய் பரப்பும் சட்டத்தின் கீழ் கைது

* மாநிலம் முழுவதும் டீ கடைகளை மூட உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் 400 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 144  உத்தரவை மீறி சாலையில் சுற்றி திரிந்தாலோ அல்லது கார்களில் சுற்றினாலோ அவர்கள் தொற்று நோய் பரப்பும் சட்டத்தின் கீழ் கைது  செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் வரும் ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகர போலீசார் மிக அவசர தேவைகளை தவிர மற்றவைக்கு வீடுகளை விட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வரகூடாது என்று ஒலி பெருக்கி மூலம் சாலைகள் மற்றும் வீதிகள் தோறும் அறிவித்து வருகின்றனர்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் அண்ணாசாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வடபழனி நூறடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, போரூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை என மாநகரம் முழுவதும் 400 இடங்களில் சாலையின் இடையே தடுப்புகள் அமைத்து தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.ஆனால் 144 தடை உத்தரவை மீறி பொதுமக்கள் சாலைகளில் தங்குதடையின்றி சுற்றி வருகின்றனர். அவர்களை போலீசார் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். சிலர் கடந்த 2 நாட்களாக வீடுகளில் முடங்கி கிடப்பதால் அவரவர் தங்களது கார்களில் முககவசம் அணிந்தபடி சுற்றி வருகின்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து கடுமையாக கடிந்து கொண்டு வீடுகளுக்கு திரும்பி செல்லுமாறு அறிவித்தனர். அத்தியாவசிய கடைகளான பால், காய்கறி, மளிகை கடைகளில் காலை முதலே கூட்டம் அலை மோதுகிறது. கடைகளில் கூட்டம் காணப்பட்டால் கடை சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து வருகின்றனர். இதற்கிடையே டீ கடைகளில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடுகின்றனர். இதனால் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் டீ கடைகள் மூட போலீசார் உத்தரவிட்டுள்ளனர். தடை உத்தரவை மீறி பைக்கில் சென்றால் சம்பந்தப்பட்ட நபர்களின் பைக்கை பறிமுதல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 புற நகர் பகுதிகளில் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்கள் திறந்து இருந்தது. தாம்பரம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், மந்தைவெளி, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் உட்புறங்களில் உள்ள பெரிய கடைகள் அனைத்தும் திறந்து இருந்தது. தடை உத்தரவை தொடர்ந்து மீறி சாலைகளில் சுற்றி வந்தாலும் 5 பேருக்கு மேல் ஒன்று கூடினாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ஐபிசி 188(அரசு உத்தரவை மீறுதல்) மற்றும் 269 (உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தொற்று நோய் பரப்புதல்) கீழ் வழக்கு பதிவுகள் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவையில்லாமல் கார்களில் சுற்றினாலும் அவர்களையும் கைது ெசய்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>