1 முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு உத்தரவை அடுத்து தமிழகத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  1 முதல் 9ம் வகுப்பு வரை சுமார் 1 கோடியே 10 லட்சம் மாணவ- மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடக்கும். இந்நிலையில், தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 2 மற்றும் 4ம் தேதிகளில் தொடங்கியதும் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் கண்டறியப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மத்திய அரசின் சார்பில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் 14ம் தேதி வரை பள்ளிகள் உள்ளிட்ட எந்த நிறுவனங்களும் இயங்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களால் இறுதித் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த மாணவர்களின் நலன் கருதி 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி ெபற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: