சாதி, மத, இன, மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து கொரோனா நோயிலிருந்து தமிழ்நாட்டை காப்போம்: முதல்வர் வேண்டுகோள்

சென்னை: சாதி, மத, இன, மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து ,  அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு,  கொரோனா நோயிலிருந்து  தமிழ்நாட்டைக் காப்போம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு ஆற்றிய உரை:  உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ், சீனாவில் துவங்கி, காட்டுத் தீ போல், வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசின் வேண்டுகோளின்படி, 21 நாட்கள் ஊரடங்கை நாமும் கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, அரசின் சார்பில்  ரூபாய் 3780 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும்.  ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

கட்டிடத் தொழிலாளர்கள், மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள, ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு, சிறப்பு தொகுப்பாக 1000 ரூபாயும் மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு,     ஒரு கிலோ சமையல் எண்ணெயும் வழங்கப்படும். பதிவுசெய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் 1,000 ரூபாயுடன், கூடுதலாக 1,000 ரூபாய்  நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து, நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள், அவர்களாகவே முன்வந்து, தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். தனிமைப்படுத்துதல் என்பது,  உங்களையும்,  உங்கள் குடும்பத்தினரையும், சமுதாயத்தையும், நாட்டையும் பாதுகாக்கத் தான். உங்கள் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைப் போல,  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும்,  அரசுக்கு முக்கியம். கடுமையான சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல், போன்ற அறிகுறிகள்  தென்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரையோ, அல்லது அரசு மருத்துவமனையை அணுகவும்.   மருத்துவரின் ஆலோசனை இன்றி, சுய மருத்துவம் செய்யாதீர்கள்.

தேவைப்படின், அரசு அறிவித்துள்ளஉதவி மையத்தின் எண்கள், 104 அல்லது 1077ஐ தொடர்பு கொள்ளவும்.  விழித்திரு - விலகி இரு - வீட்டில் இரு அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை, கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.  மக்கள் நலன் கருதி,  அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளை,  மீறுவோர் மீதும், வீண் வதந்திகளை பரப்புவோர் மீதும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பார்கள், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதியோர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். சாதி, மத, இன, மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து ,  அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு, கொரோனா நோயிலிருந்து  தமிழ்நாட்டைக் காப்போம். கொரோனா தொற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடி, தமிழக மக்கள் அனைவரது நலனையும் காப்போம் என இத்தருணத்தில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>