கொரோனா முக கவசம் கேட்டதால் ஸ்டான்லி மருத்துவர் இடமாற்றம்? இயக்குனர் உத்தரவால் சர்ச்சை

சென்னை: கொரோனா முக கவசம் கேட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை திரும்ப பெற வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவர் சந்திரசேகர். இவரை கடந்த 24ம் தேதி தூத்துக்குடி மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்து மருத்துவ கல்லூரி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி இவரை பணியில் இருந்து விடுவித்து ஸ்டான்லி டீன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் முக கவசம் கேட்டதால் சந்திரசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவர்கள் சிலர் கூறியதாவது: சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் முக கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதில் முக்கியமானவர் சந்திரசேகர் என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இவரை இடமாற்றம் ெசய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் போராட்டத்தின் போது இடமாற்றம் செய்த பல மருத்துவர்கள் தற்போது பல கிலோ மீட்டர் பயணம் செய்து பணியாற்றி வருகின்றனர். இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றனர்.  

இது தொடர்பாக தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,” எந்த காரணமாக இருந்தாலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ள நேரத்தில் இடமாற்றம் செய்து மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவர் சந்திரசேகருக்கு மூத்த நிலை மருத்துவர் பதவியில் இருந்து உதவி பேராசிரியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இரண்டு பதவிகளுக்கு ஒரு ஊதியம் மற்றும் ஒரே நிலையில் உள்ள பதவிகள்தான். எனவே இந்த இடமாற்றத்தை உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் திரும்ப பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related Stories:

>