×

21 நாள் முடக்கத்தால் 9 லட்சம் கோடி வர்த்தக இழப்பு: ஜிடிபியில் 4 சதவீதம் ‘அவுட்’ என ஆய்வில் கணிப்பு

புதுடெல்லி: கொரோனா பரவுவதை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் முடக்கம் மற்றும் மாநில அரசுகள் ஏற்கெனவே அறிவித்து அமலில் இருந்த 144 தடை உத்தரவுளால், சுமார் ₹9 லட்சம் கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 தொழில்துறைகள் மீண்டு வர முடியாத சூழ்நிலையில் உள்ளன. பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், புதிய முதலீடுகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில், சீனாவில் கொரோனா பாதிப்பு இருந்தபோதே ஏற்றுமதி, மருந்து மற்றும் ஆட்டோமொபைல் துறையினர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர்.  தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவுதல் தீவிரம் அடைய துவங்கியுள்ளதால், இதை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்களுக்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய துறைகள், சேவைகளை தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை. நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன.

 இந்த நிலையில், இந்த 21 நாள் முடக்க அறிவிப்பால் இந்தியாவில் 9,000 கோடி டாலர் (சுமார் 6,75,000 கோடி வர்த்தக இழப்பு ஏற்படும். இத்துடன், பல்வேறு மாநிலங்கள் ஏற்கெனவே அறிவித்து அமலில் இருந்து வரும் 144 தடை உத்தரவால் மேலும் 3,000 கோடி டாலர் இழப்பு சேர்த்து மொத்தம் 12,000 கோடி டாலர் (சுமார் ₹9 லட்சம் கோடி) வர்த்தக இழப்பு ஏற்படும்.  இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் என பார்க்லேய்ஸ் என்ற இங்கிலாந்து நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், வரும் 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே கணித்திருந்ததை விட 1.7 சதவீதம் குறைந்து 3.5 சதவீதமாக மட்டுமே இருக்கும். வரும் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மேலும் குறுகிய கால கடன் வட்டியை மேலும் 65 அடிப்படை புள்ளிகள் குறைக்கலாம். இந்த ஆண்டுக்குள் மொத்தம் ஒரு சதவீதம் வட்டியை குறைக்க வாய்ப்புகள் உள்ளன  என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 அதோடு, மூன்று வாரத்துக்கும் மேலான முடக்கத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் தொடர்பாக மத்திய  அரசு மவுனம் காத்து வருகிறது. அதில் இருந்து தொழில்துறைகள் மீள பெரிய  அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோல், யெம்கே  என்ற நிறுவனம் அறிவித்துள்ள ஆய்வறிக்கையில், பணமதிப்பு நீக்கம் மற்றும்  ஜிஎஸ்டியால் சிறு தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அவற்றின் கடன் சீரமைப்பு, நிதியுதவி போன்றவற்றை அறிவிப்பதன் மூலம்  தொழில்துறைகள் பாதிப்பில் இருந்து மீள உதவியாக இருக்கும் என இந்தியாவின் பொருளாதார பாதிப்பு தொடர்பான ஆய்வில் எடல்வெய்ஸ்  என்ற நிறுவனம் பரிந்துரை  செய்துள்ளது.

* தொழில்துறைகள் இயங்காததால், வரும் 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே  கணித்திருந்ததை விட 1.7 சதவீதம் குறைந்து 3.5 சதவீதமாக மட்டுமே இருக்கும்.
* பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்துறைகள்  மீண்டு வர ஏற்ற நிதியுதவி திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

விமான நிறுவனங்களுக்கு 27,000 கோடி நஷ்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து உள்நாட்டு மற்றும் விமான போக்குவரத்து முடக்கம் காரணாமாக, இந்த துறைக்கு வரும் 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இபழ்பு 330 கோடி டாலர் முதல் 360 கோடி டாலர் வரை (சுமார் 24,750 கோடி முதல் 27,000 கோடி வரை) இழப்பு ஏற்படும் என விமான போக்குவரத்து துறையின் ஆலோசனை அமைப்பான சிஏபிஏ தெரிவித்துள்ளது.


Tags : Business Loss , Business loss, GDP
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...