×

தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றினால் 6 மாதம் சிறை தண்டனை: தமிழக அரசு எச்சரிக்கை .,, இதுவரை 100 பேர் கைது; 900 பேர் மீது வழக்கு

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை  உத்தரவை மீறி அத்தியாவசியமின்றி யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல தமிழக அரசும் பால், காய்கறி, உணவுப் பொருட்கள், மருத்துவம், தண்ணீர், ஊடகம் தவிர மற்ற முக்கியமில்லாத விஷயங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று 144  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தடை உத்தரவு அமலில் இருந்தாலும் தமிழகத்தில் பெரும்பாலாேனார் மதிக்காமல் டீ கடைகளில் ஒன்று கூடுவது, மார்க்கெட்டுகளில் இடித்து தள்ளி பொருட்களை வாங்குவது, ஊரடங்கு எப்படி இருக்கிறது என்று சுற்றிப் பார்ப்பது மற்றும் சாக்லெட், கூல் டிரிங்ஸ் வாங்க செல்வது, நண்பர்களை, உறவினர்களை பார்க்க செல்வது என்று கொரோனா பற்றிய எந்த பயமும் இல்லாமல் தாராளமாக நேற்று காலை வரை சுற்றி திரிந்தனர். இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதையடுத்து உடனடியாக டீ கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அனைத்து டீ கடைகளும் உடனடியாக மூடப்பட்டது. மேலும் சில மளிகை மற்றும் காய்கறிக்கடைகளில் சமூக விலக்கு இல்லாமல் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டும், போட்டி போட்டுக் கொண்டும் மளிகை பொருட்கள், காய்கறிகளை வாங்கிச் செல்ல முயன்றனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் 1 மீட்டர் இடைவெளியில் வாடிக்கையாளர்களை நிற்க வைத்து விற்பனை செய்வதாக இருந்தால், கடை செயல்பட அனுமதிப்போம். இல்லையெனில் சீல் வைத்துவிடுவோம் என்று எச்சரித்தனர். இதனால் பல இடங்களில் அரசின் விதிகளை பின்பற்றினர். பின்பற்றாத கடைகள் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் இளைஞர்கள், இளம் பெண்கள் சாலைகளில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் எந்த தேவையும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்ற வண்ணம் இருந்தனர். இது அதிகளவில் நடந்து வருகிறது என்ற தகவலும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு அதிரடியாக களத்தில் இறங்கியது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்ய மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய்துறையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் போலீஸ் எல்லையில் அத்தியாவசியமில்லாமல் சுற்றி வரும் நபர்களை பிடித்து திருப்பி அனுப்பினர். பலரது வாகனங்களை பறிமுதல் செய்தனர். மாநிலம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனை முழு விவரம்.

சென்னை: சூளைமேட்டில் உள்ள ஜி.ஹெச் ரோட்டில் வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். இதுகுறித்த தகவல் சூளைமேடு ேபாலீசாருக்கு சென்றது. பிறகு போலீசார் அங்கு சென்று, அந்தப் பகுதியை சேர்ந்த ராஜ்கபூர் (21), வினோத்குமார்(27), வீரபாண்டியன் (22), சாந்தா (27), விக்னேஷ் (22) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பைக்குகளில் சாலையில் சுற்றித்திரிந்த 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சங்கரன்கோவில் பகுதியில் ஒரு ஓட்டல் உரிமையாளருக்கு கொரோனா உள்ளதாக வதந்தி பரப்பியதாக ஒருவரும், சேர்ந்தமரத்திலும் ஒருவருக்கும் கொரோனா உள்ளதாக வதந்தி பரப்பிய ஒருவரும் கைது செய்யப்பட்டார். கடையநல்லூரில் விதிமீறி சாலையில் பைக்கில் சுற்றித் திரிந்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் பைக்குகளில் சுற்றித்திரிந்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காதர்பேட்டை, இக்பால் சாலை, ஷாகிராபாத், புதூர், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது சாலையில் பைக்கில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் மற்றும் கடைகள் முன் அமர்ந்து உள்ளவர்கள் அனைவரையும் பலமுறை  எச்சரித்தும் கலைந்து செல்லாததால், அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.  ருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு அருகே சில வாலிபர்கள் பைக்கில் வலம் வந்தபடி, டிக்டாக் வீடியோவை பதிவு செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். வேலூர்: 144 தடை உத்தரவு மீறியதாக வேலூர் மாவட்டத்தில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருவர் மீதும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துமீறலில் ஈடுபட்டதாக 80 பேர் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் 14 பேர் மீதும், திருப்பூர் மாவட்டத்தில் 21 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 143 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மதுரையில் அபராதம்: 144 தடை உத்தரவையும் மீறி, மதுரை நகர், புறநகரில் சுற்றித்திரிந்த 130 பேரை பிடித்து நேற்று ரூ.500 வரை வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விதிமீறல்களின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  சேலம்: சேலம் மாநகரில் தடையை மீறியதாக 13 பேர் மீதும், நாமக்கல் மாவட்டத்தில் 13 பேர் மீதும், தர்மபுரி மாவட்டத்தில் 12 பேர் மீதும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்செங்கோட்டில் 5பேர் கைது செய்யப்பட்டனர்.  சென்னையில் 88 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 7 வழக்குகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 60, கரூரில் 10, பெரம்பலூரில் 15, அரியலூரில் 100, தஞ்சாவூரில் 75, திருவாரூரில் 22, நாகையில் 11 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் சுமார் 100 பேர் கைதாகி உள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் மீது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறி தெருக்களில் சுற்றி திரியும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தமிழக அரசு விடுத்துள்ள எச்சரிக்கை: தமிழகத்தில் பறக்கும் படை குழுக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் கடைகளுக்கு வரும்போது சுகாதார துறை அறிவுறுத்தலின்படி சரியான இடைவெளியில்  பொதுமக்கள் இருக்கும்படி அறிவுறுத்துவார்கள். இதை தவிர்த்து தடையாணை 144 ஐ மீறி சட்டத்திற்கு புறம்பாக வெளியில் வரும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது பேரழிவு மேலாண்மை சட்டப்படி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் வழக்கு அல்லது 144 தடை உத்தரவுப்படி 188 பிரிவின் கீழ் அவர்கள் மீது 6 மாத சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்படும்.

வைரஸ் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து தமிழக டிஜிபி திரிபாதி கூறும்போது, 144 தடை உத்தரவை மீறுகிறவர்கள் மீது அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முதியோர் காப்பகங்களுக்கு உணவு வழங்க கட்டுப்பாடு
முதியோர் இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கு வெளியிலிருந்து உணவு கொண்டு செல்லக்கூடாது. அவ்வாறு முதியோர் இல்லங்களில் சமையலறை இல்லையெனில் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களுக்கான உணவு சமைக்கும் இடங்களில் சுகாதார அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்த பின்னரே உணவு வழங்க அனுமதி அளிக்கப்படும். எனவே அரசின் இந்த  நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்கள் முழுஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : arrests , Corruption order, jail sentence, Tamil Nadu government, 100 people arrested, coronavirus
× RELATED தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், கைது...