மே மாதத்தில் இந்தியாவில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பரவ வாய்ப்பு: விஞ்ஞானிகள் அதிர்ச்சி ரிப்போர்ட்

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய கோவ்-இண்ட்-19 ஆய்வுக் குழு, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதில் நோய் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா மிகச்சிறப்பாக செயல்பட்டு வைரசை கட்டுப்படுத்தி இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் உண்மையிலேயே வைரஸ் பாதித்தோரின் சரியான எண்ணிக்கை என்ற முக்கிய கூறு இல்லை என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ‘‘இந்தியாவில் பரிசோதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவு. பரவலான சோதனை இல்லாத நிலையில், சமூக பரிமாற்றத்தால் வைரஸ் பரவியவர்கள் எண்ணிக்கையை மதிப்பிடுவது முடியாத காரியம். மேலும், மருத்துவமனையை தாண்டி, மருத்துவ வசதிகளுக்கு அப்பாற்பட்டு, எந்த அறிகுறியும் இல்லாமல் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எவ்வளவு பேர் என்பதையும் இதுவரை கண்டறியவில்லை’’ என கூறி உள்ள விஞ்ஞானிகள், ஆரம்பகட்ட பாதிப்புகளின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பாதிப்புகளோடு ஒப்பிட்டு பார்த்ததில் இந்தியாவில் தற்போதைய நிலை போலவே வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்தபடி இருந்தால் மே மாத நடுப்பகுதிக்குள் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சம் முதல் 13 லட்சமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.  இந்தியாவில் சுமார் 30 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது. கொரோனாவால் உயிரிழக்க இந்த பாதிப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், மருத்துவ வசதிகளும் குறைவு. கொரோனா தீவிரமடைந்தவர்களை ஐசியு வார்டில் அனுமதிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அதிகளவு நோயாளிகளை ஐசியுவில் சேர்ப்பதற்கான வசதிகள் இல்லை என்றும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கையும் அதிகளவில் இருக்கலாம் என எச்சரித்துள்ளனர். அதே சமயம், அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் மூலம் இந்த மதிப்பீட்டில் மாற்றம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>