×

கொரோனாவால் முடங்கிய ரசிகர்களை உற்சாகப்படுத்த 2011 உலககோப்பை மறுஒளிபரப்பு: நினைவுக்கு வருகிறது அழகிய தருணங்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் என்றுமே மறக்க முடியாத தொடராகும். முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகால இடைவெளியில் இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரை வென்றது. இந்த தொடர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கனவையும் நனவாக்கியது. சேவாக்கின் முதல் பால் பவுண்டரி, சச்சின் கடைசி உலகக்கோப்பை, யுவராஜ் சிங்கின் ஆல்ரவுண்ட் ஆட்டம், கம்பீரின் போராட்டம், தோனியின் பினிஷிங் என தொடர் முழுவதும் இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்த உலககோப்பை தொடரின் அழகிய தருணங்களை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் களமிறங்கியுள்ளது. கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், விளையாட்டுப் போட்டிகளை ‘மிஸ்’ செய்திருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் சேனல்கள் பழைய போட்டிகளை மறு ஒளிப்பரப்பு செய்கிறது.
அந்தவகையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் 2011 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் அரையிறுதி, இறுதிப்போட்டி மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளன.

அதன்படி மார்ச் 30, இந்தியா - பாகிஸ்தானுடனான அரையிறுதிப் போட்டியும், ஏப். 2, இந்தியா - இலங்கை உடனான இறுதிப்போட்டியும் மறு ஒளிபரப்பாகவுள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : 2011 World Cup ,Cheerful Moments Corona , Corona, fan, 2011 World Cup, re-broadcast
× RELATED கர்ப்பப்பை புற்றுநோயால்...