கொரோனாவால் பெருநகரங்கள் மூடல்; இப்படி ஆயிடுச்சே எங்க ஊரு..! கொல்கத்தா வீதிகளை பார்த்து கங்குலி உருக்கம்

கொல்கத்தா: கொரோனா பரவல் காரணமாக கடைபிடிக்கப்படும் ஊரடங்கு உத்தரவால், நாட்டின் பெருநகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்களை வீட்டிற்குள் இருக்கும்படி மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளதால் முக்கிய நகரங்கள் முதல் கிராமங்கள் வரை மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் உள்ளன. இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது சொந்த ஊரான கொல்கத்தா நகரின் வெறிச்சோடிய சாலைகளை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising

அதில், ‘என் நகரத்தை இப்படிப் பார்ப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை... மக்களே பத்திரமாக இருங்கள். உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒரு கடினமான நேரத்தைக் கடந்து செல்கின்றன. விரைவில் எல்லாம் சிறப்பாக மாறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் என்னுடைய அன்பும் பாசமும்...’ என்று கூறி பதிவை முடித்துக் கொண்டார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகெங்கிலும் உள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மீதமிருந்த இரண்டு ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடரும் ஏப். 15ம் தேதிக்கு பிசிசிஐ ஒத்திவைத்தது. இன்றைய நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்த போட்டியும் நடக்குமா? என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: