ஊரடங்கு உத்தரவால் ஏழைகள் பாதிக்கப்படுவர் கொரோனா ஒன்றும் டி20 மேட்ச் அல்ல..! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் விளக்கம்

இஸ்லாமாபாத்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலால் 916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தேசிய பாதுகாப்பு குழுவுடன் விவாதிக்கப்பட்டது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் டி20 கிரிக்கெட் போட்டி போன்றது அல்ல; இந்த கொரோனா நெருக்கடி ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு தொடரக்கூடும். எனவே அரசு தரப்பில் கவனமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது.

Advertising
Advertising

வரும் நாட்களில் ஊரடங்கு உத்தரவு தேவைப்பட்டால், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இவ்வாறு ஊரடங்கு உத்தரவு, பணிநிறுத்தம் போன்றவற்றால் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவதை சீர்குலைக்கும். சமுதாயத்தின் ஏழை பிரிவினரைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவர்கள் ஊரடங்கின் போது வாழ்வாதாரத்தை தொலைத்து சம்பாதிக்க மாட்டார்கள். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் அனைத்து மாகாணங்களும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். சிந்துவில் முழுமையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தானில் ஊரடங்கு அமலில் உள்ளது. நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படும். அவர்கள் பொருளாதாரத்தின் சுமைகளைத் தாங்க வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: