அமெரிக்காவை அலற வைக்கும் கொரோனா : நேற்று ஒரே நாளில் 197 பேர் பலி.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ நெருங்கியது

வாஷிங்டன் : அமெரிக்காவில் கொரானா பாதிப்பினால் நேற்று ஒரே நாளில் 197 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ நெருங்கியுள்ளது. உலகின் 197 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் 54,905 பேர் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 197 பேர் பலியானதைத் தொடர்ந்து அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 783 ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க் இதுவரை 25,665 பாதிப்புகளுடன், நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது,

இந்த நிலையில் அமெரிக்காவில் முக்கிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகளான முகக்கவசம், கை கழுவும் திரவம் ஆகியவற்றை பதுக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இது குறித்து பேசிய டிரம்ப், முக்கிய மருந்துகள், பாதுகாப்பு கருவிகளை கூடுதல் விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.மேலும் அமெரிக்க குடிமக்களின் துன்பத்தை பயன்படுத்தி யாரும் ஆதாயம் அடைவதை தாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா ஆகிய பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், அந்த பகுதிகளுக்கு முக்கிய மருந்துகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.    

Related Stories: