மந்தைவெளிப்பாக்கம் பகுதியில் போக்சோ வழக்கில் கைதான டிரைவர் அடித்து கொலை? தம்பியிடம் தீவிர விசாரணை

சென்னை: மந்தைவெளிப்பாக்கம் ராஜகிராமணி தோட்டத்தை சேர்ந்தவர் பழனி (40), கார் டிரைவர். தற்போது குடும்பத்துடன் கிழக்கு கடற்கரை சாலையில் வசித்து வருகிறார். வழக்கமாக வார இறுதி நாட்களில் தாய் வீடான ராஜகிராமணி தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு வந்து தம்பி வெங்கடேசனுடன் வீட்டின் 2வது மாடியில் மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை பழனி தனது சகோதரனுடன் மது அருந்தியுள்ளார். இந்நிலையில், இரவு 10 மணி அளவில் மொட்டை மாடியில் இருந்து பழனி மர்மமான முறையில் கீழே விழுந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.

தகவலறிந்து வந்த பட்டினப்பாக்கம் போலீசார், பழனியை மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணையில், எண்ணூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பழனி சமீபத்தில் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றதும், வெளியே வந்ததும், நேற்று முன்தினம் தனது சகோதரன் வெங்கடேசனுடன் மது அருந்தியது தெரிந்தது.

வழக்கமான இடத்தில்தான் இருவரும் குடித்துள்ளனர். எனவே, மாடியில் இருந்து தவறி விழவாய்ப்பு குறைவு. எனவே போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் பழனியை வெங்கடேசன் அடித்து உதைத்து, கீழே தள்ளி விட்டு கொலை செய்தாரா என போலீசார் வெங்கடேசனை பிடித்து விசாரிக்கின்றனர். பழனியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தானாக கீழே விழுந்து இறந்தாரா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: