திருப்பூரில் தாய், தாத்தா இறந்ததை நேரில் பார்த்த சிறுவன் தற்கொலை

திருப்பூர்: திருப்பூரில், தாய் மற்றும் தாத்தா இறந்ததை நேரில் பார்த்த மகன் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் அடுத்த ராக்கியாபாளையம் பிரிவை சேர்ந்தவர் அபர்ணா (45). இவரது கணவர் தேவராஜன் கடந்த 14 ஆண்டுகள் முன் விபத்தில் இறந்துவிட்டார். பின்னர், அபர்ணா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ராக்கியாபாளையம் பிரிவில் தந்தை வெள்ளியங்கிரி (75) மற்றும் மகன் ஜித்தினுடன் (17) வசித்தார்.  கடந்த 6 மாதங்களுக்கு முன் அபர்ணாவின் தாய் இறந்தார். அவரது இறுதி சடங்கை செய்ய பணம் இல்லாமல் அபர்ணா அவதிப்பட்டார். இறுதிச்சடங்கிற்கு அருகில் வசித்தவர்கள் உதவி செய்தனர். இதனால் அபர்ணா மனவேதனையில் இருந்தார்.

இந்நிலையில், ஜித்தின் நேற்று முன்தினம் இரவு தன் மாமா பாபுவை செல்போனில் அழைத்து, தாய் அபர்ணா திடீரென என் கண்முன்னே இறந்து விட்டார், இதைப்பார்த்த தாத்தா வெள்ளியங்கிரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரின் மரணத்தை நேரில் பார்த்ததால் என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை. இதைப் பார்த்த நானும் பல வழிகளில் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். ஆனால் என்னால் சாக முடியவில்லை, அவர்களது உடலை என்ன செய்வதென்றும் தெரியவில்லை, என மிகவும் உருக்கமாக பேசினார். பின்னர், இணைப்பு துண்டித்துவிட்டார். இதையடுத்து, பாபு உடனடியாக ரூரல் போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் நேற்று முன்தினம் இரவு அபர்ணா வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு அபர்ணா சடலம் தனியாக கிடந்தது. வெள்ளிங்கிரி, ஜித்தின் சடலங்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்தன.

இதையடுத்து மூன்று பேரின் சடலங்களையும் மீட்ட போலீசார் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். ஜித்தின் தற்கொலை செய்வதற்கு முன் வீட்டிற்குள் தாய் மற்றும் தாத்தாவின் புகைப்படத்தை வைத்து நெய் அபிஷேகம் செய்து ரொட்டி வைத்து வழிபாடு நடத்தியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories:

>