×

பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் எப்போது தொடங்கும்: பேரவையில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கேள்வி

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி (திமுக), “பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் எப்போது தொடங்கப்படும். 10 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் பணியை முடிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2, 118 கி.மீ. நீளத்திற்கான வழித்தடங்கள், 3, 4 மற்றும் 5 ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான ஒப்புதலை மாநில அரசு ஜனவரி மாதம் வழங்கியது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. நீளத்திற்கான 4ம் கட்ட பணிகள் மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகு தொடங்கும்.

மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 52 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜெய்க்கா நிதி வழங்க இருக்கிறது. தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவீத நிதி வழங்க உள்ளது. 3வது கட்டமாக சோழிங்கநல்லூரில் இருந்து சிப்காட் வரை 13 கிலோ மீட்டர் பணிகள் தொடங்கப்பட உள்ளது. 4ம் கட்டமாக பூந்தமல்லியிலிருந்து கலங்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகளும் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 5ம் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Poonthamalli ,Lighthouse , Poonamallee, Lighthouse, Metro Rail, A.Krishnaswamy MLA
× RELATED பூந்தமல்லி கடை வீதியில்...