நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட நாளில் அரங்கேற்றம்: 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து 3வது மாடியிலிருந்து வீசி படுகொலை: மதுரவாயலில் வாலிபர் கைது

சென்னை: மதுரவாயலில் பாலியல் வன்கொடுமை செய்து 10 வயது சிறுமியை 3வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொடூர கொலை செய்த  வாலிபரை போலீசார் கைது செய்தனர். நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட நாளில், மீண்டும் ஒரு பயங்கரம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதி எம்.எம்.டி.ஏ. காலனி 4வது பிளாக் 9வது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். ராஜஸ்தானை சேர்ந்த இவர்  மனைவி மற்றும் 10 வயது மகளுடன் தங்கியிருந்து பானிபூரி விற்பனை செய்து வந்தார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு  படித்து வந்துள்ளார்.

இவர்கள் முதல் தளத்தில் வாடகைக்கு குடியிருந்துள்ளனர். அந்த குடியிருப்பின் 2வது தளத்தில் திண்டிவனத்தை சேர்ந்த சுரேஷ் (29)  என்பவர் மனைவி என்று கூறிக் கொண்டு ஒரு பெண்ணுடன் வசித்துள்ளார். சுரேஷ், சென்ட்ரிங் தொழிலாளி. இந்த குடியிருப்பில் கழிப்பறை வீட்டை ஒட்டி  வெளிப்புறமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிறுமி இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே இருந்த கழிப்பறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும்  வீட்டிற்குள் திரும்பி வராததால் அவரது பெற்றோர் வெளியே வந்து பார்த்துள்ளனர். ஆனால் அங்கு மகள் இல்லாததால் குடியிருப்பு மற்றும் தெருவிலும்  தேடியுள்ளனர். இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சிறுமியை தீவிரமாக தேடியுள்ளனர்.

பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மதுரவாயல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ  இடத்துக்கு மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வந்து சிறுமியை தேடும் பணியை முடுக்கிவிட்டனர். இதற்கிடையே வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக சிறுமியின் புகைப்படத்தை பதிவேற்றி ஒருபுறம் தேடலாம் என சிலர் ஆலோசனை  கூறினர். இதையடுத்து சிறுமியின் புகைப்படத்தை எடுப்பதற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றனர். அப்போது மொட்டை மாடியில் சென்று தேடலாம் என திடீரென தோன்றியதால் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றனர். அங்கு தேடி பார்த்துவிட்டு வீட்டின் பின்பகுதியில் உள்ள காலி  இடத்தில் மாடியிலிருந்து டார்ச் லைட் அடித்து பார்த்தனர். அங்கு சிறுமி படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அலறினர்.

இதையடுத்து போலீசாரின் உதவியுடன் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். வீட்டை ஒட்டிய பகுதியில்  இருந்த கழிப்பறைக்கு சென்ற சிறுமி எப்படி வீட்டின் பின்புறம் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தாள் என தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அந்த குடியிருப்பின் 2வது தளத்தில் வாடகைக்கு குடியிருந்த திண்டிவனத்தை சேர்ந்த சுரேஷ் (29) போதையில் இருந்துள்ளார். அவரை சந்தேகத்தின்  பேரில் பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று அவரிடம்  போலீசார் உரிய முறையில் விசாரித்துள்ளனர். இதில் கிடைத்த தகவல் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:சுரேஷ் தனது மனைவி என்று கூறப்படும் பெண்ணுடன் சில மாதங்களுக்கு முன்புதான்  அங்கு வாடகைக்கு வந்துள்ளார். இந்த வீட்டிற்கு எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் சென்ட்ரிங் வேலை செய்துள்ளார்.

சம்பவத்தன்று தனது  மனைவியை அவரது தாய் வீட்டுக்கு செல்ல கொளத்தூருக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்ன், மது அருந்திய சுரேஷ், செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துள்ளார். அந்த சமயம்தான், சிறுமி கழிப்பறைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். இதை பார்த்த சுரேஷ், சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து, தனது வீட்டிற்கு அழைத்துத் சென்று ஆடைகளை களைந்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதில் அதிர்ச்சியான சிறுமி மயக்கமடைந்து விட்டார். இது வெளியில் தெரிந்தால் போலீசார் பிடித்து விடுவார்கள் என நினைத்த சுரேஷ், சிறுமியை 3வது தளமான மொட்டை மாடிக்கு தூக்கிச் சென்று அங்கிருந்து வீட்டின் பின்புறம் உள்ள காலி மனையில் தூக்கி வீசியுள்ளார். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி உயிரிழந்தார்.

மாடியிலிருந்து சிறுமி தவறி விழுந்தது போல இருக்கட்டும் என நினைத்தே மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு வந்து கதவை பூட்டிக் கொண்டு தூங்குவது போல நடித்துள்ளார். சிறுமியை அந்தப் பகுதி பொதுமக்கள் தீவிரமாக தேடிய போது, சுரேஷின் வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டி எழுப்பியுள்ளனர். இந்த தகவல் அறிந்து சிறுமியை தேடுவது போல அவர்களுடன் சேர்ந்து தேடியுள்ளார். மேலும் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பது வரை சுரேஷ் கூடவே இருந்து நாடகமாடியுள்ளார். போலீசாரின் தீவிர விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்று, 3வது மாடியிலிருந்து வீசி கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து சுரேஷை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை  விதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் தான் நிறைவேற்றப்பட்டது. அந்த நாளில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போரூரை அடுத்த மவுலிவாக்கம் பாய்கடை பகுதியில் இதே போல ஹாசினி என்ற 7 வயது சிறுமி தஷ்வந்த் என்ற வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. அதுபோல இந்த சம்பவமும் நடந்திருப்பதாக அப்பகுதி மக்கள்  ஆதங்கத்துடன் குறிப்பிட்டனர். மேலும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற  செயல்களில் ஈடுபடும் காமகொடூரன்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Related Stories:

>