×

பாட்டுக்கொரு தலைவி பட்டம்மாள்: இன்று (மார்ச் 19) டி.கே.பட்டம்மாள் பிறந்த தினம்

ஆணாதிக்கம் கொண்ட அந்தக்காலத்தில் பெண்களை பால்ய வயதிலேயே, மணம் முடித்துக் கொடுக்கும் பழக்கம் இருந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது; வீட்டிற்கு ஆண்கள் வந்தால் எதிரே நிற்கக்கூடாது என்று எல்லாம் கூறி, பெண்களை அடிமைப்படுத்தி வந்த காலமது. இசைத்துறையிலும் பெண்கள் இறங்கக்கூடாது என கூறப்பட்டது. அப்போதுதான், இசைத்துறையில் ஒரு சின்னக்குயில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. அவர்தான் பிரபல கர்நாடக இசை மேதை டி.கே.பட்டம்மாள். இன்று அவரது பிறந்தநாள். அவரைப்பற்றி தெரிந்து கொள்வோமா?

காஞ்சிபுரத்தில் 1919, மார்ச் 19ம் தேதி தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர் - ராஜம்மாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் பட்டம்மாள். இவரது தாய் ஒரு சிறந்த கர்நாடக பாடகி. ஆனாலும், குடும்ப சூழல் காரணமாக அவரால் வெளியே பாட முடியாத நிலை ஏற்பட்டது. சிறுவயதிலேயே தனது மகள் பட்டம்மாளுக்கு கர்நாடக இசையை கற்றுக் கொடுத்தார் ராஜம்மாள். அவரும் 4 வயதிலேயே பாடத்தொடங்கி அசத்தினார். இவருடன் உடன்பிறந்த 3 சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள். அப்போது காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இசை மேதை நாயனா பிள்ளையிடம் இசை கற்றுக்கொண்டார்.

அப்போது இசைத்தட்டுகளில் பாடல்களை பதிவு செய்வது வெளியிடுவது வழக்கம். பிரபல ஹெச்.எம்.வி இசைத்தட்டு நிறுவனம், டி.கே.பட்டம்மாளின் இனிமையான குரலில் பாடல்களை பதிவு செய்து வெளியிட விரும்பியது. அப்போதைய சூழலில் அதற்கு தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி மறுத்து விட்டார். தகவலறிந்த அவரது நண்பரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன், பட்டம்மாளின் குரலை இசைத்தட்டில் பதிவு செய்தே ஆக வேண்டுமென பிடிவாதம் பிடித்தார். கடைசியில் பிடிவாதம் ஜெயித்தது. இவ்வாறுதான் இவரது இசைப்பயணம் தொடர்ந்தது.

இந்த சூழலில்தான் பட்டமாள், ஈஸ்வரனை மணந்தார். கணவரும் மனைவியின் இசைப்பயணத்துக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். வீட்டு வானொலிகள், திருவிழாக்கள், சுதந்திரப் போராட்ட மேடைகள் என பல இடங்களிலும் பட்டம்மாளின் பாட்டு, பட்டித்தொட்டியெல்லாம் ஒலித்தது. கர்நாட இசை பயின்றபோதும், மேடைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களையும் பாடி வந்தார். கச்சேரிகளின் முன்பகுதியிலேயே தமிழ் பாடல்களை பாடும் மரபை இளம் வயதிலேயே டி.கே.பி பின்பற்றினார். பாரதியார் பாடல்கள், தேவாரம், திருப்புகழ் போன்றவற்றை பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கல்கி எழுதிய தியாக பூமி கதை திரைப்படமானபோது, அதில் டி.கே.பி, தேச சேவை செய்ய வாரீர் என்ற பாடலைப் பாடினார். 1947ம் ஆண்டு வெளியான, நாம் இருவர் படத்தில் அவர் பாடிய, ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே என்ற பாடலும், வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே என்ற பாடலும் டி.கே.பியின் இசையை உலகறிய செய்தன.

டி.கே.பி என்றால் நினைவுக்கு வருவது எப்படிப் பாடினரோ என்ற பாடல்தான். இதை அவர் எப்படித்தான் பாடினாரோ என்று எண்ணத்தோன்றும். அந்தளவுக்கு பாடலை கேட்பவர்கள், மெய் மறந்து போவார்கள். அந்தக்காலத்தில் புதியதாக பாட்டு கற்க செல்லும் பெண்ணிடம், பட்டம்மாள் போல வர வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ணித்தான் அனுப்புவார்களாம். அந்தளவுக்கு தனது வசீகர குரலால், மக்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார் டி.கே.பட்டம்மாள். வாழ்க்கை முழுவதையும் இசைக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர் டி.கே.பி என்றால் மிகையல்ல. கான சரஸ்வதி, சங்கீத சாகர ரத்னா, சங்கீத கலாநிதி, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பட்டங்கள் அவரைத் தேடி வந்து அலங்கரித்தன. வயதானபோதும் மேடைக்கச்சேரிகளில் பாடி வந்த டி.கே.பட்டம்மாள், 2009ம் ஆண்டு, ஜூலை 16ம் தேதி உயிரிழந்தார். ஆனாலும், தனது பாடல்கள் மூலம், அவர் காற்றில் கலந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

Tags : DK Patammal ,pattammal , pattammal
× RELATED இந்தியன் 2வில் ஒரு பாட்டுக்கு ஆடும் நடிகை?